உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாமுனிவர் கட்டிய தேவாலயம்!

வீரமாமுனிவர் கட்டிய தேவாலயம்!

இத்தாலி நாட்டின் கான்ஸ்டான்டைன் ஜோசப் டெஸ்டி (வீரமாமுனிவர்), பெரியநாயகி அன்னை உட்பட இரண்டு சிலைகளுடன் (சொரூபங்கள்) 1700ல் இந்தியா வந்து, பாளையக்காரர்கள் ஆட்சிக்குட்பட்ட காட்டில் (தற்போதைய  விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் பகுதி) தங்கினார். அப்போது சிலைகளில் ஒன்று காணாமல் போனது. இது குறித்து  பாளையக்காரிடம் வீரமாமுனிவர் முறையிட்டார். காணாமல் போன சிலையை மீட்க, தனது படைவீரர்களுக்கு உத்தரவிட்ட பாளையக்கார மன்னர், தனக்கு ஆண் வாரிசு இல்லாததால் தாங்கள் அதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என வீரமாமுனிவரிடம் வேண்டினார்.

மன்னரின் படைவீர்கள் காட்டில் சிலையை தேட பூமியைத் தோண்டியபோது, ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு எழுந்து; அங்கு காணாமல் போன சிலை கிடைத்தது. அப்போது, அங்கிருந்த பசுமாடு ஒன்று காம்பிலிருந்து தானாக பாலை சுரந்தது. அதைக் கண்ட மன்னர், சிலையை அங்கேயே வைத்து பிரதிஷ்டை செய்து, அங்கு பெரியநாயகி அன்னைக்கு குடில் அமைத்தார். பின்னர், மன்னர் தானம் அளித்த 30 ஏக்கரில் வீரமாமுனிவர் பெரியநாயகி அன்னைக்கு பிரம்மாண்ட  தேவாலயம் கட்டினார். இந்நிலையில், பாளையக்கார மன்னருக்கு ஆண் வாரிசு பிறந்தது. இதனால், ஆலயத்தில் வழிபட்டால் குழந்தையின்மை, திருமணம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம் உள்ளது.  ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழாவில், 23ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழாவில், தேரோட்டத்தை இன்றும் பாளையக்கார மன்னரின் வாரிசுகள் தான் துவக்கி வைக்கின்றனர். திருத்தல பொறுப்பாளர் அருள்தாஸ் கூறுகையில், ‘இங்கு நடக்கும் தேவாலய தேரோட்டத்திற்குத் தேவையான அலங்கார பொருட்கள் பெங்களூரிலிருந்து வழவழைக்கப்படும். பாளையக்காரர்களின் வாரிசான ஊராட்சி தலைவர் பாலதண்டாயுதம் ராஜமரியாதையுடன் குதிரையில் அழைத்து வரப்படுவார். பின்னர் அவர் அலங்கரித்த தேர் பவனியைத் துவங்கி வைப்பார்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !