உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தபுத்தூரில் கோ பூஜை

கோவிந்தபுத்தூரில் கோ பூஜை

அரியலூர்: கோவிந்தபுத்தூர் சிவன்கோவிலில் நடந்த கோ பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரங்கலம் அருகே கோவிந்தபுத்தூரில் மங்களாம்பிகை உடனாய கங்கா ஜடேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. கோவந்தபுத்தூர், கோ கரந்த புத்தூர் உள்ளிட்ட பல்வேறு காரண பெயர்களுடன் விளங்கும் கோவிந்தபுத்தூர் கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றின் வடகரை தலமாகவும், ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரியம் மிகுந்ததுமான இந்த சிவாலயத்தில், நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர், திருவிச மங்கை எனப்படும் தேவாராம் பாடியுள்ளார். பலா மரத்தின்கீழ் புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தை, பசு பால் சொரிந்து வெளிப்படுத்திய புராண பெருமையுடன், பல முனிவர்கள் மற்றும் அர்ச்சுணன் உள்ளிட்டோரால் வழிபாடு செய்யப்பட்டதுமான இத்தலத்தில், ஆடி பூரத்தை முன்னிட்டு, உலக நன்மையை கருதி கோ பூஜை விழா நடந்தது. திருவாவடுதுறை 23வது ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் ஆசியுடனும், கும்பகோணம் இறைபணி திருக்கூட்டம் சார்பில் நேற்று முன்தினம் நடந்த கோ பூஜையில், கோவிந்தபுத்தூர் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது பசுக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்றனர். திருவடிக்குடில் ஸ்வாமிகள் தலைமையில் பக்தி சிரத்தையுடன் நடந்த கோ பூஜை விழாவில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் செயலாளர் தமிழரசன், நிர்வாகிகள் கிருஷ்ணன், மணிகண்டன், சேதுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !