தஞ்சை மாவட்ட கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!
தஞ்சாவூர்: புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு தஞ்சை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை புன்னை நல்லுார் மாரியம்மன் கோயில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது. அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. தஞ்சை அருகே வடவாறு பிருந்தாவனத்தில் உள்ள ராகவேந்திரா கோயில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வெள்ளிகாப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொண்டிராஜபாளையத்தில் உள்ள யோகநரசிம்மபெருமாள் கோயில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில், மேலவீதி சங்கரநாராயணபெருமாள் கோயில், பங்காரு காமாட்சியம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைபோல, கும்பகோணம் ஒப்பியப்பன்கோயில் வெங்கடாலசபதி திருக்கோயிலில், அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சுப்பரபாதத்திற்கு பிறகு விஷ்வரூப தரிசனமும், அதனை தொடர்ந்து வெங்கடாலசபதிக்கு பலவகை பூக்கள் அலங்காரம் செய்யபட்ட அபிஷேகம் நடந்தது. ஆறுபடை வீடுகளில் ஒன்றன சுவாமிமலை முருகன் கோயிலில் படிக்கட்டுகளில் மஞ்சள்,குங்குமம் இட்டு 5 முக திருவிளக்கு ஏற்றி ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிப்பாடு நடத்தினர். மாவட்டத்தில் உள்ள எல்லா கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்து.