உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமகிருஷ்ண மடத்தில் சாரதாதேவியின் 163 வது ஜெயந்தி விழா சொற்பொழிவு!

ராமகிருஷ்ண மடத்தில் சாரதாதேவியின் 163 வது ஜெயந்தி விழா சொற்பொழிவு!

மதுரை: ராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு திருநாள் - புது வருடம் விழாவை, 1.1.2016-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.  மேலும் அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 164-ஆவது ஜெயந்தி விழாவும் விமரிசையாக நடைபெற்றது.   இதை முன்னிட்டு விடியற்காலை 5.00 மணி முதல் மங்கள ஆரதி, வேத பாராயணம், ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோயிலை வலம் வரும் நாம சங்கீர்த்தனம், விசேஷ பூஜைகள், பஜனைகள் ஆகியவை தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன.  காலை 9.30 மணிக்கு பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டே அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் திருவுருவப் படத்துடன் சாரதா வித்யாலயா பள்ளி மாணவ - மாணவிகளின் ஊர்வலம், 10.30 மணிக்கு ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.   இந்த விழாவில் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், கல்பதரு திருநாள் மகிமை-புது வருடம் மகிமை பற்றி, சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் விவரம் வருமாறு: ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் 1886 ஜனவரி மாதம் முதல் தேதி ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றைய தினம் அவர் கேட்டதையெல்லாம் தரும் கற்பக மரம் போன்று, தன்னுடைய பக்தர்களுக்கு ஆன்மிக அனுபவங்களை வாரி வாரி வழங்கினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்றைய தினம் ஞானம், பக்தி, இறைவனின் தரிசனம், இறை அனுபவங்கள் ஆகியவற்றைத் தாராளமாக பக்தர்களின் தகுதியையும், தகுதியின்மையையும் பொருட்படுத்தாமல் வாரி வாரி வழங்கினார். அவ்விதம் ஆன்மிக வள்ளலாக ஸ்ரீ ராமகிருஷ்ண இருந்த ஜனவரி முதல் தேதியை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்கள் எல்லாவற்றிலும், கல்பதரு தினம் (கற்பக மரம் தினம்) என்று கொண்டாடுவது வழக்கம். திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டிலும் உறக்கம் கலைந்து விழித்துக்கொண்டவர்கள், உறங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்புகிறார்கள். இதற்கு, ஆன்மிக விழிப்பு பெற்றவர்கள் (ஆன்மாக்கள்), ஆன்மிக விழிப்பு பெறாத ஆன்மாக்களை எழுப்புகிறார்கள் என்பது உட்கருத்தாகும்.
ஆன்மிக விழிப்பு பெற்ற பெண்கள், அக்ஞான உறக்கத்திலுள்ள பெண்களை எழுப்புவதை திருப்பாவை - திருவெம்பாவையில் நாம் பார்க்கிறோம்.
ஆன்மபசி என்பது தரையில் போடப்பட்ட மீன் துடிப்பதுபோல - கன்று தாய்ப்பசுவுக்காகத் துடிப்பதுபோல - இறைவனுக்காக மனித மனம் துடிதுடிக்கும் நிலையாகும்.

நமக்கெல்லாம் வயிற்றுப் பசி இருப்பது நன்றாகத் தெரியும். ஆனால் ஆன்மபசி என்று ஒரு பசி இருக்கிறது. ஆனால் இந்த  ஆன்மபசி என்பது எல்லோருக்கும் தெரியாது; எல்லோருக்கும் வராது. அது ஜீவாத்மா இறைவனுக்காக ஏங்கியும் உருகியும் இருக்கும் உயர்ந்த ஒரு நிலையாகும்.
தீயவர்களுடன் இருப்பதைவிட தனித்திருப்பது நல்லது. தனித்திருப்பதைவிட உயர்ந்த சத்சங்கத்தில் இருப்பது நல்லது. இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று அறிவில் சிறந்த அவ்வையார் கூறியிருக்கிறார். அந்த ஏகாந்தத்தில் நம் மனம் இறைவனுடன் ஒன்றியிருக்க வேண்டும் - அதுவே இனிது.  பூர்வ வாசனைகள் தீர்ந்துபோய் ஆன்மிகப் பக்குவம் பெற்றவர்கள் உலகில் வாழும்போதே, உயர்ந்த ஆன்மிக நிலையில் வாழ்கிறார்கள்; உடலை உகுத்த பிறகு முக்தி பெறுகிறார்கள். உலக ஆசை முற்றிலும் நீங்கியவர்கள், மீண்டும் பிறவாத முக்தி என்ற பேரின்ப நிலையை அனுபவிக்கிறார்கள். உலக ஆசைகள் - உலகப்பற்றுகள் ஒருவரிடம் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கே அவர் ஆன்மிக இன்பம் அனுபவிக்க முடியும்  - அதுதான் ஆன்மிக இன்பம் பெறுவதற்கு உரிய அளவுகோல்.  உலக ஆசைகள் ஒருவரிடம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர் ஆன்மிக இன்பம் அனுபவிக்க முடியாது.  ஆசைவிடவிட ஆனந்தமாமே என்று திருமூலர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.  உலகப்பற்றுகள் - ஆசாபாசங்கள் உள்ள வரையில் - உயர்ந்த ஆன்மிக நிலையில் ஒருவர் பூரணமாக நிலைத்திருக்க முடியாது.  

உயர்ந்த இறையனுபூதி நிலையைப் பெறுவதற்கு - ஆசாபாசங்களிலிருந்தும் - உலகப்பற்றுகளிலிருந்தும் நாம் விடுபடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.    கற்பக மரம் போன்றவன் இறைவன். எனவே நாம் ஆத்மசமர்ப்பணத்துடன்  ஜபம், தியானம் செய்து செய்யும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும். இறைவன் பக்தர்களுக்கு ஒன்றைக் கொடுப்பதிலும், கொடுக்க மறுப்பதிலும் - இரண்டிலும் அவரது அறக்கருணை அல்லது மறக்கருணை இருக்கிறது.  ஒரு சமயம் நாடோடி ஒருவன் கற்பகமரத்தின் கீழ் சென்று அமர்ந்தான். அவன் பசியுடன் இருந்தான். நல்ல சாப்பாடு வேண்டும் என்று நினைத்தான். உடனே அவன் முன்னால் நல்ல உணவு தோன்றியது. பிறகு அவன் படுப்பதற்கு நல்ல ஒரு கட்டில் வேண்டும் என்று நினைத்தான். கட்டில் கிடைத்தது. கால் பிடித்து விடுவதற்கு இரண்டு பெண்கள் வேண்டும் என்று நினைத்தான். அவர்கள் அங்கு தோன்றினார்கள். இப்போது புலி வந்தால் எப்படி இருக்கும்? அது என்னை அடித்துக் கொன்றுவிடுமே! என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. உடனே அங்கு புலி தோன்றி, அவனை அடித்து கொன்றுவிட்டது.  இறைவன் கற்பகமரம் போன்றவன் - கேட்டதை நிச்சயம் கொடுப்பவன். அவனிடம் கேட்க வேண்டிய விதத்தில் நாம் கேட்டால், இல்லை என்று சொல்லத் தெரியாதவன் இறைவன்.  இறைவனிடம் நல்வினை உடையவர்கள், புண்ணிய ஆத்மாக்கள், விவேகிகள் ஆன்மிக வலிமை, முக்தி ஆகியவற்றை வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இதற்கு மாறாக தீவினை உடையவர்கள், இறைவனிடம் தாற்காலிகமான உலகியல் சுகங்களை வேண்டிப் பெறுகிறார்கள். அந்த உலகியல்  இன்பங்கள் மனிதனை முடிவில் உலகப்பற்றில் ஆழ்த்துகின்றன.  ஒருவன் செய்த தீவினைகள், அவனை இறைவனிடம் மீண்டும் பிறவாத முக்தியைக் கேட்க விடாமல் தடுத்துவிடும்; அவை அவனை நல்லதைக் கேட்க விடாது.  ஒருவன் செய்த நல்வினைகள்தான், அவனை ஆன்மமுக்தியை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி செய்யும். ஆசைகள் உள்ளவரை நமது தீவினைகள், தீவிர உலகப்பற்றின்மை நம்மிடம் வராமல் தடுத்துவிடும். இறைவன் தன்னையே கொடுக்கத் தாயாராக இருக்கும்போது - உலக ஆசை காரணமாக, நம்மிடம் உள்ள தீயவாசனைகள் ஞானத்தைக் கேட்க விடாமல் நம்மைத் தடுத்துவிடுகிறது. உலகில் பிறந்த உயிர்கள் எல்லையற்ற துன்பங்களை அனுபவிக்கின்றன. இந்தத் துன்பங்கள் அனைத்திற்கும் விதை போன்று மூலகாரணமாக இருப்பவை உலக ஆசைகளும் உலகப்பற்றுகளும் ஆகும். உலகப்பற்றுகளிலிருந்தும் உலக ஆசைகளிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்ட மனிதர்கள் (ஜீவாத்மாக்கள்), மீண்டும் பிறவாத முக்திப் பேரின்பத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்கிறார்கள்.

இறைவன் கேட்டதை எல்லாம் அளிக்கும் கற்பகமரம் என்பது உண்மை, உண்மை, உண்மை. ஆனால், எல்லோரும் ஏன் முக்தி, உலகப்பற்றின்மை, ஆழ்ந்த தியான வாழ்க்கை ஆகிய உயர்ந்தவற்றை இறைவனிடம் கேட்பதில்லை? என்றால், அதற்குப் பதில், அவர்களின் தீவினைகள், பாவங்கள், உலகியல்பற்று, உலக ஆசைகள் என்பதுதான்.  எனவே பிரார்த்தனை சமயத்தில் நாம் ஆன்மிக வாழ்க்கைக்கு தேவையானவை, இறைவா, எனக்கு நல்ல ஆன்மிக வாழ்க்கையைக் கொடு, என்னை தியானத்திலும், பிரார்த்தனையிலும், ஜபத்திலும் கடலில் கரைந்த உப்புபோல் எப்போதும் வைத்திரு, எனக்கு உலகப்பற்றின்மையைக் கொடு, உலக ஆசைகளை என்னிடமிருந்து நீக்கு, அருள்மயமான சிந்தனைகளிலும்,  தெய்விகச் சிந்தனைகளிலும் என்னை எப்போதும் வைத்திரு, என் கையைப் பிடித்து அருள் வழியில் என்னை எப்போதும் அழைத்துச் செல், என் மாயையையும்,  அக்ஞானத்தையும் நீக்கு, இந்தப் பிறவியிலேயே எனக்கு முக்தி கொடு, உன் நினைவில் எப்போதும் எல்லா நிலைகளிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் என்னை வாழச் செய். எனக்கு நல்ல சத்சங்கம் கொடு, தீய சிந்தனைகள் இல்லாமல் என்னை இருக்கச் செய், பயனுடைய சிந்தனைகளை எனக்குக் கொடு, எல்லாவிதமான சுயநலங்களிலிருந்தும் என்னை விடுவித்துவிடு போன்றவற்றை கேட்டு இறைவனிடம் நாம் எப்போதும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.  இவ்வாறு தன் சொற்பொழிவில் கூறினார்.

விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பகலுணவு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு மேலூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலூர், பட்டூர் நவஇந்தியா நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவிகள் பங்கு பெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்பதரு நாள் - அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் புக் ஸ்டாலில் புத்தகங்கள் 25% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !