லாரி மோதியதில் தஞ்சாவூர் சாரங்கபாணிகோயில் நாலுகால் மண்டபம் சேதம்
தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலின் நான்கு கால் மண்டபத்தில் லாரி மோதியதில் கொடுங்கை இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகாமக பெருவிழா தொடர்புடைய வைணவகோயில்களில் முக்கிய கோயிலாக திகழ்வது சாரங்கபாணி சுவாமி கோயிலாகும். இந்த கோயிலில் கடந்த வருடம் 13.7.2015 அன்று 1.50 கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இந்த கோயில் சன்னதி தெரு அருகே நான்கு கால் மண்டபம் உள்ளது. சுவாமி புறப்பாட்டின் போது இந்த நான்கு கால் மண்டபத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு ஆராதனை நடை பெறும். நாலு கால்மண்டபத்திலிருந்து ராஜகோபுரம் இடையே வர்த்தக கடைகள் உள்ளன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கடைகளுக்கு பொருட்களை இறக்குவதற்காக அதிக லோடு ஏற்றிய லாரி ஒன்று நாலு கால் மண்டபத்தின் ஓரமாக சென்ற போது லாரி இடித்து மண்டபத்தின் கொடுங்கை சுமார் 6 அடி அளவில் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லாரி இடித்ததால் மண்டபத்தின் நிலை என்ன என்று தெரியவில்லை. பொறியாளரை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன் லாரி ஒன்று அளவுக்கதிகமான பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்த நாலு கால்மண்டபம் வழியாக நுழைந்த போது மண்டபத்தின் ஒரத்தில் உள்ள கொடுங்கை இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை உடனடியாக சரி செய்து விடுவோம் என்றார். மேலும் இந்த நாலு கால் மண்டபத்தின் வழியாக லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.