கோவை இஸ்கான் கோவிலில் திருமஞ்சன சேவை
கோவை: கோவை இஸ்கான் கோவிலில், நேற்று திருமஞ்சன சேவை நிகழ்ச்சி நடந்தது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், வரும், 9ம் தேதி, கோவையில் தேர் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, ஜெகநாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியாருக்கு, திருமஞ்சன சேவை நிகழ்ச்சி நடந்தது. பல புனித நதிகளிலிருந்து கொண்டு வந்த நீரில் அபிஷேகம் செய்யப்பட்டது.பக்தி வினோத சுவாமியின் சொற்பொழிவு, வட, தென்மாநிலங்களில் புகழ்பெற்ற சாதம், சப்பாத்தி, ரொட்டி, காய்கறிகள், பழங்களை கொண்டு செய்த உணவுப் பண்டங்கள், இனிப்புகள், காரவகைகள் உட்பட, 1008 வகை உணவுப் பதார்த்தங்கள் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அனைத்து பக்தர்களின் அபிஷேகத்தை ஏற்றுக் கொள்ளும் பகவான் ஜெகநாதருக்கு, உடல் நலம் குன்றிப்போகும் என்பது ஐதீகம். இதனால், தேர் திருவிழா நாள் வரை, மூலிகைகளே உணவாக படைக்கப்படும். அனாவஸர காலம் என்றழைக்கப்படும் இந்த நாட்களில், தரிசனம் நிறுத்தப்படுகிறது.