உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக பணி அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக பணி அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகளை அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி நேற்று ஆய்வு செய்தார். இக்கோயில் கும்பாபிஷேகம் ஜன., 20 ல் நடக்கிறது. இதற்காக ரூ. 7.90 கோடியில் கிழக்கு, மேற்கு ராஜ கோபுரம் மராமத்து மற்றும் வடக்கு, தெற்கு புதிய ராஜகோபுரம் சீரமைக்கும் பணி நடந்தது. சுவாமி, அம்மன், காசிவிஸ்வநாதர் உள்ளிட்ட 22 சன்னதி விமானங்கள் மராமத்து செய்யப்பட்டன. கோயில் 3 ம் பிரகாரம் வர்ணம் பூசுதல், பர்வதவர்த்தினி அம்மன் முன் கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி நடக்கிறது. கோயில் மேல் தளத்தில் முக்கிய பிரமுகர்கள், மடாதிபதிகள் தரிசனம் செய்ய பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது. ஜன. 15 ல் துவங்கும் யாக சாலை பூஜைக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. திருப்பணிகளை அறநிலைதுறை ஆணையர் ஆய்வு செய்தார். பின் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோயில் அதிகாரிகள் கூறியதாவது: கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக மதுரை, கோவையில் இருந்து மொபைல் கழிப்பறை வாகனங்கள் கொண்டு வரப்பட உள்ளன. பொதுபணிதுறையினர் ஆய்வுக்கு பின் கோயில் மேல்தளத்திற்கு முக்கிய நபர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும். கும்பாபிஷேகத்திற்கு பின் கோயில் யானை லெட்சுமி தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு செல்லும். மூடியிருக்கும் பக்தர்கள் ஓய்வு கூடம் விரைவில் திறக்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !