மகரஜோதியன்று பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இடுக்கிமாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
மூணாறு: இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் மகரஜோதி நாளில் புல்மேட்டில் குவியும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட உள்ளன. இடுக்கி மாவட்டம் புல்மேடு வழியாக சபரிமலைக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். தவிர புல்மேட்டில் இருந்து மகர விளக்கு தரிசனம் செய்வது வழக்கம். ஜன.15ல் மகர ஜோதியன்று புல்மேட்டில் குவியும் பக்தர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வசதிகளும் செய்துதரப்பட உள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் எம்.பி., ஜாய்ஜ் ஜார்ஜ் தலைமையில் நடந்தது. அனைத்து துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கட்டுப்பாட்டு அறை:மரக ஜோதி காண, வரும் நாட்களில் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்கள் பயன் பெறும் வகையில் ஜன. 10 முதல் 16ம் வரை பல்வேறு பகுதிகளில் "ஹெல்ப் டெஸ்க் குகள் செயல்பட உள்ளன. குறிப்பாக பீர்மேடு தாலுகா அலுவலகத்திலும், மஞ்சுமலை, குமுளி, பீர்மேடு போன்ற கிராம நிர்வாக அலுவலகங்களிலும் "ஹெல்ப் டெஸ்க் மற்றும் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை போன்றவை செயல்படுகின்றன. பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பாஞ்சாலிமேட்டில் ஜன. 12ல் இருந்தும், புல் மேட்டில் ஜன. 14ல் இருந்தும் தற்காலிகமாக தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. கோழிக்கானம், புல்மேடு, பருந்துபாறை, சத்திரம், பாஞ்சாலிமேடு போன்ற பகுதிகளில் ஒலி பெருக்கிகள் மூலம் பல்வேறு மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. கோழிக்கானம் முதல் உப்புபாறை வரையிலான 11 கி.மீ., தொலைவிற்கு தேவையான தெரு விளக்கு வசதிகளை ஜன. 13க்கு முன்பாக செய்து கொடுக்கப்படும். அழுதகடவு-சத்திரம் இடையேயான பாதையில், வழக்கமாக செல்லும் வழிகளின் திசைகளை குறிக்கும் வகையில் முன் அறிவிப்பு போர்டுகள் வைக்கப்படுகிறது. உப்புபாறை,புல்மேடு போன்ற பகுதிகளில் மகர விளக்கு நாளில் பக்தர்களுக்கு தடங்கல் இன்றி குடிநீர் வினியோகிப்பதற்கான நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் எடுத்துள்ளது, என. அதிகாரிகள் தெரிவித்தனர்.