சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் "அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் பொருட்டு ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் 7ம் திருநாளான 7ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லக்கில் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். விழாவின் 9ம் திருநாளான நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் நடந்தது. பின்னர் 5 மணிக்கு மேல் அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 10.08 மணிக்கு தேர் நிலையில் இருந்து வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரில் கோமதி அம்பாள் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் சங்கரநாராயணசுவாமி கோயில் துணை ஆணையர் ராஜாமணி, தாசில்தார் சந்திரசேகர், துணை தாசில்தார் நடராஜன், நகராட்சி தலைவர் பார்வதிசங்கர், யூனியன் சேர்மன் அன்புமணி, நகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், மேலாளர் ராஜாமணி, அ.தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், தொகுதி இணை செயலாளர் வேல்சாமி, தலைமை கழக பேச்சாளர் சங்கை கணபதி, நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ரமேஷ், மாவட்ட பேரவை துணை செயலாளர் குமாரவேல், தே.மு.தி.க., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் திவ்யா ரெங்கன், கோமதிஅம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் மாரியப்பன், காந்திநகர் நாட்டாண்மைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.