உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீயிருக்க பயமேன்.. இன்னும் 13 நாளில்.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம்!

நீயிருக்க பயமேன்.. இன்னும் 13 நாளில்.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவிலில் மகாகும்பாபிஷேகம் ஜன. 20ல் நடப்பதை ஒட்டி இந்த சிறப்பு பகுதி வெளியாகிறது. ராமன் இலங்கைக்கு செல்ல கடலைக் கடக்க முடிவு செய்தார். சமுத்திரராஜனை அழைத்தார். அவன் வரவில்லை. ராமேஸ்வரம் பக்கத்திலுள்ள திருப்புல்லாணி என்ற ஊரில் தர்ப்பையை விரித்து மூன்று நாட்களாக படுத்துக் கிடந்தார். சமுத்திரராஜன் கண்டு கொள்ளவே இல்லை. உடனே லட்சுமணனை அழைத்து, வில்லைக் கொடு. இந்தக் கடல் மீது பாணம் எய்து அதை வற்றச் செய்கிறேன். வானரங்கள் எல்லாம் நடந்தே போகட்டும் என்றார் கோபமாக. அப்போதும் சமுத்திரராஜன் பயப்படவில்லை. உடனே வில்லை எடுத்தார். அம்பைத் தொடுக்கும் வேளையில் சமுத்திரராஜன் வெளிப்பட்டான் அட்டகாசமான சிரிப்புடன். ராமா! என்னை அழித்து விடலாம் என்று நினைக்கிறாயா! உன் தம்பி இருக்கும் போது நான் ஏன் பயப்பட போகிறேன், என்றான்.

யார் இந்த லட்சுமணனைச் சொல்கிறாயா? என்றதும், இல்லை, இல்லை பரதனைச் சொல்கிறேன். அவன் உன் பாதுகைகளை (காலணி) பெற்றுச்  சென்றான் இல்லையா! அதை நந்தி கிராமத்தில் வைத்து தினமும் ஆயிரம் கலசங்களால் அபிஷேகம் செய்து வருகிறான். அந்த நீர், சரயு நதி வழியாக தினமும் என்னை வந்து சேர்கிறது. அந்த பாத தீர்த்தம் என் மீது பட்டு என் உடம்பு அதி பயங்கர பலம் பெற்றுள்ளது. நீ எய்யும் அம்பை தாங்கும் சக்தியை உன் பாத தீர்த்தமே எனக்கு தந்துள்ளது. இப்போது என்ன செய்வாய்? என்று எதிர்க்கேள்வி கேட்டான். யார் தன்னைக் கொல்ல வந்தானோ, அவனை அவனது திருவடியைக் கொண்டே மடக்கி விட்டான் சமுத்திரராஜன். ராமனின் திருவடிக்கு அவ்வளவு சக்தி மிக்கது. ராமேஸ்வரம் ராமனின் திருவடிபட்ட இடம். அவர் கால் வைத்த அக்னி தீர்த்தக் கடலில் நாம் நீராடும் போது நம் மனதில் பக்தி மட்டுமே இருக்க வேண்டும். துணிகளை கழற்றி கடலுக்குள் போடக்கூடாது. குப்பை கொட்டக் கூடாது. கும்பாபிஷேகத்திற்கு செல்பவர்கள் பக்தியோடு அக்னி தீர்த்தத்தில் கால் வையுங்கள்.  மகிமை மிக்க ராமனின் திருவடி பட்ட இடம் என்பதை உணர்ந்து பரவசத்துடன் நீராடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !