உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொய்வின்றி தொடரும் வழிபாடு: சந்து மாரியம்மன் சாமி கும்பிடு விழா!

தொய்வின்றி தொடரும் வழிபாடு: சந்து மாரியம்மன் சாமி கும்பிடு விழா!

சின்னாளபட்டி: நமது முன்னோர்கள் ஏற்படுத்திய பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மனித நலனை முன்னிறுத்தி  உருவாக்கப்பட்டவை என்பதை மறுப்பதற்கில்லை.

நாகரிகம் என்ற பெயரில் நமது வசதிக்காக  பாரம்பரிய நிகழ்வுகளில் சிலவற்றில் மாற்றம் செய்துள்ளோம். பலவற்றை மறையச் செய்துவிட்டோம். மறையாத பட்டியலில் பெரிய அளவில் நடக்கும் கோயில் திருவிழாக்கள் ,சிறிய அளவில் நடக்கும் சாமிகும்பிடு நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. சின்னாளபட்டியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தை மாதத்தில் ,தெரு சாமி கும்பிடு விழா  அல்லது சந்து மாரியம்மன் சாமி கும்பிடு விழா நடந்து வருகிறது. மனித சமுதாயத்தின் நலனை அடிப்படையாக கொண்டுதான் இந்த விழாவை முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர்.

விழாவின் பூர்வீகம்:60 ஆண்டுகளுக்கு முன் சின்னாளபட்டியில் பிளேக், காலரா உள்ளிட்ட ஆட்கொல்லி நோய்கள் தீவிரமாக பரவி பல உயிர்களை காவு கொண்டது. மருத்துவ விஞ்ஞானம் வெகுவாக வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்தில், ஊரின் பொதுப்பிரச்னை குறித்து ஆலோசிக்க முக்கியஸ்தர்கள் ஒன்று கூடினர்.  இறைவழிபாடு ஒன்றுதான் இந்த நோய்களின் தீர்வாக அமையும் என முடிவு செய்தனர். இதையடுத்து, ஒவ்வொரு பகுதியிலும் மாரியம்மன் சாமி கும்பிடு நடத்தப்பட்டது. இதன்பிறகு நோய்களின் தாக்கம் படிப்படியாக குறைந்து முற்றிலும் மறைந்தது.
இதன் விளைவாக இன்றுவரை இந்த விழா ஆண்டுதோறும் தொடர்கிறது. விழா நடக்கும் விதம்: ஆண்டு தோறும் மார்கழி மாதத்தின் இறுதியில் ஒவ்வொரு தெருக்களில் உள்ள சாமி கும்பிடு விழா குழு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்  கூட்டம் நடத்தி விழா நடத்த வேண்டிய நாள் எதுவென தீர்மானிப்பர். தை அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை செவ்வாய் கிழமை மாலை, சாமி கும்பிடு நடக்கும் முச்சந்தியில், கையெடுத்து கும்பிடுதல் நடக்கும். அன்று பூசாரி மற்றும் முக்கியஸ்தர்கள் காப்பு கட்டி விரதம் அனுசரிக்க துவங்குவர்.

குறிப்பிட்ட ஒருவரது வீட்டில் முளைப்பாரி வளர்ப்பதற்கான வேலைகளில் பெண்கள் ஈடுபடுவர்.  இதன்பிறகு, சாமிகும்பிடும் இடத்தில் தெருவை மறித்து தென்னங்கீற்று பந்தல் மூலம் கோயில் அமைக்கப்படும். அடுத்து வரும் செவ்வாய் கிழமை அதிகாலையில் மக்கள் நீராடி,புத்தாடைகள் உடுத்தி, கோயில் முன் கூடுவர். மேள தாளம் முழங்க அனைவரும் பூசாரியின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வருவர். பின்னர் அனைவரும் சின்னாளபட்டி பிரிவில் உள்ள ராமஅழகர் சுவாமி கோயில் பிருந்தாவன தோப்பிற்கு சென்று, கரகம் ஜோடித்து, முளைப்பாரி ஊர்வலத்துடன் நகர்வலம் வருவர். இந்த விழாவிற்கு கட்டுப்பட்ட தெருக்களின் வழியாக வரும் ஊர்வலம் மாரியம்மன் கோயிலுக்கு வந்து சேரும். மதியம் பிரம்மாண்டமான முறையில் அன்னதானம் நடைபெறும். மாலையில் விளையாட்டு போட்டிகள், குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தேங்காய்,பழங்கள், மாவிளக்கு எடுத்து வந்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபடுவர். பின்னர் பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை நடக்கும். இரவு ஒன்பது மணியளவில் பொது பூஜை நடந்த பிறகு, மஞ்சள் நீராட்டுதலுடன் அம்மன் கரகத்தை ஊர்வலமாக எடுத்து சென்று கங்கை சேர்த்தல் நடக்கும். பிறகு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சர்க்கரை பொங்கல், தேங்காய், பழம் மற்றும் கரும்பு பிரசாதமாக வழங்கப்படும்.  அதிகாலையில் துவங்கி நள்ளிரவிற்குள் முடிவடையும் இந்த சந்து மாரியம்மன் சாமி கும்பிடு, ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட தெருக்களில் கொண்டாடப்படுகிறது. ஜாதி,மதங்களை கடந்து குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் உடல் நலன், மன நலன் மற்றும் ஒற்றுமைக்காக இந்த விழாவை இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !