இன்று சகல மங்கலங்களும் தரும் அனுமன் ஜெயந்தி!
மதுரை: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுவருகிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் துõணிலும் அருள்பாலிப்பது வழக்கம். சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ’ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்துõரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த பிறகு பெரிய கடலை தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,. எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார். அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று..
’ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதுõதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் ’அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. அனுமன் ராமனுக்கு துõதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம்.
ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் இவர். ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாமல் வீரனாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த ராமபக்தராகத் திகழ்ந்தார். சீதையை மீட்டுக் கொடுத்ததற்காக ராமபிரானிடம் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீககுணங்களும் அவரிடம் இருந்தன. அவர் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் தற்பெருமையாகச் சொன்னதே இல்லை. நான் ராமனின் துõதன். அவர் இட்ட பணியை என் தலையால் செய்யக் காத்திருக்கிறேன்.
எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்போது, நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன் என்று சொன்னவர். சாதாரணச் செயலை செய்துவிட்டே தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாகக்கூட ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. இப்படி பலவித பெருமைகள் கொண்ட அனுமனின் பிறந்த நாளில், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, ராமாயண சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராம ஜெயம் என்று நாள் முழுவதும் ஜெபிப்பதும் நன்மை தரும். ராமநாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமன் எழுந்தருளி அருள்புரிவார். அவரை ராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள் பெறுவோம். வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும். காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.