சபரிமலை நடை 16ல் திறப்பு!
சபரிமலை : ஆவணி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வரும் 16ம் தேதி மாலை, 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார். அன்றைய தினம், வேறு பூஜைகள் ஏதுமிருக்காது. மறுநாள் அதிகாலை முதல், நடை திறந்திருக்கும் ஐந்து நாட்களிலும், நெய் அபிஷேகம் நடக்கும். இது தவிர, உதயாஸ்தமனம், படி பூஜைகள் போன்ற சிறப்பு பூஜைகளும் உண்டு. வரும் 21ம் தேதி இரவு, 10 மணிக்கு, கோவில் நடை அடைக்கப்படும். புதிய தந்திரி பதவியேற்பது எப்போது? சபரிமலை சன்னிதியில் தந்திரியாக பணியாற்றி வந்த கண்டரரு ராஜீவரரு, கடந்த, 5ம் தேதி நிறப்புத்திரி உற்சவத்தை முடித்துக் கொண்டு, தன் பதவிக்காலத்தை நிறைவு செய்து, பதினெட்டாம் படி இறங்கினார். அடுத்த ஓராண்டிற்கு புதிய தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு நியமிக்கப்பட்டுள்ளார். அவர், வரும் 16ம் தேதி மாலை, சபரிமலைக்கு வந்து புதிய பொறுப்பை ஏற்பார். அதற்கு பின்பே ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்படும்.