உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தனை கோவில்களிலும் அன்னதானம்!

அத்தனை கோவில்களிலும் அன்னதானம்!

சென்னை: "மாநிலத்தில் உள்ள அத்தனை கோவில்களிலும் அன்னதானம் வழங்கப்பட வேண்டும் என்பது தான், முதல்வரின் கனவு. அதை நோக்கிய பயணம் தான், மேலும் 106 கோவில்களுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட்டது என்கின்றனர், இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகள். "தமிழக முதல்வரால், அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில், கோவில்களில் தொடங்கப்பட்ட அன்னதான திட்டம், முழு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம், மேலும் 106 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னதான திட்டம் பற்றி விசாரித்த போது, பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

அவை: முதல்வர் ஜெயலலிதாவின் செல்லத் திட்டமான அன்னதான திட்டம், அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், தன் கையால் அன்னதானம் வழங்கி, திட்டத்தைத் துவக்கி வைத்தார். அது, படிப்படியாக விரிவாக்கப்பட்டு, அவரது ஆட்சிக் காலத்தின் முடிவில், 360 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், வெறும் இரண்டே கோவில்களுக்குத் தான் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது. அதுவும் கூட, அக்கோவில்களின் நிதியாதாரம் கருதி, பெரிய கோவில்களில் இருந்து பிரிக்கப்பட்டதன் விளைவாகத் தான். இப்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே, இத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார் ஜெயலலிதா. அப்போது அவரது ராசி எண் ஒன்பதாக இருந்தது. திட்டங்களின் எண்ணிக்கை எல்லாமே ஒன்பது, ஒன்பதாக இருந்தது. இப்போது முதல்வரின் ராசி எண் ஏழாக மாறிவிட்டது போல. எல்லாமே ஏழு ஏழாகத் தொடர்கிறது. ஒரு கோவிலில் இத்திட்டத்தைத் துவக்கினால், குறைந்தபட்சம் 50 பேராவது சாப்பிட வேண்டும் என, அரசு எதிர்பார்க்கிறது. எப்படியும் உள்ளூர்க்காரர்கள், ஏழை பாழைகள் 10, 15 பேர் சாப்பிடுவர். அவர்களைத் தவிர, உண்மையான பக்தர்கள் 30, 40 பேராவது சாப்பிட்டால் தான், திட்டம் வெற்றி பெறும். அதை மனதில் கொண்டு தான், திட்டம் துவக்கப்படும் கோவில்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இன்னொரு முக்கியமான அம்சம், கோவிலின் நிதி ஆதாரம். அன்னதானத் திட்டத்துக்கு, தனி சமையலறை வைத்து சமைக்கப்படுகிறது. இதில், ஒரு நபருக்கான உணவு தயாரிக்க, 18 முதல், 20 ரூபாய் செலவாகிறது. 50 பேருக்கு ஆயிரம் ரூபாய் ஆகும். மாதம் 30 ஆயிரம். ஆண்டுக்கு, ஒரு கோவிலுக்கு, குறைந்தபட்சம் மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். அதற்கான வசதி வாய்ப்பு இருக்கும் கோவில்களில், இத்திட் டம் துவக்கப்படுகிறது. இதற்காகவே, அன்னதானம் வழங்கப்படும் கோவில்களில், அதற்கென பிரத்யேக உண்டியலும் வைக்கப்படுகிறது. அதில் வரும் நிதி, அன்னதானத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சரி, கோவிலில் நல்ல கூட்டம் வருகிறது. ஆனால், "டப்பு கிடையாது. அன்னதானத் திட்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றால், அதற்கும் வழி இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால், அன்னதான திட்டத்துக்கென்றே, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில், பொது நிதி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இன்றைய தேதிக்கு, 35 கோடி ரூபாய் இருக்கிறது. அதிலிருந்து பணம் எடுத்து, இத்தகைய கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு 40 கோவில்கள் வரை, சென்னையிலிருந்து பணம் செல்கிறது. திட்டத்தின் விரிவாக்கம் பற்றி, இந்து சமய அறநிலையத் துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக திட்டம் துவக்கப்பட உள்ள, 106 கோவில்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. பட்டியல், முதல்வருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. முதல்வரின் தேதி கிடைத்ததும், அதிகாரப்பூர்வமாக துவக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு கோவிலில், முதல்வரே நேரடியாக இத்திட்டத்தைத் துவக்கி வைக்கிறார். இந்த வாரத்திலேயே திட்டம் துவக்கப்பட்டுவிடும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !