பகைவன் கூட நண்பனே!
நபிகள் நாயகம் நற்குணங்களே வடிவமாக அமைந்த பண்பாளர். தவறு செய்தவர்களைக்கூட, அவர்கள் திருந்தும் வகையில் மன்னித்துவிடும் குணம் கொண்டவர். அதோடு அவர் எதிரிகளிடமும் பகைமை காட்டாமல், அவர்களிடமும் தனது இனிய முகத்தையே காட்டினார். இதற்கு உதாரணமாக நபிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம். ஒருசமயம் நபிகள் நாயகத்தை கொலை செய்வதற்காக மெக்காவிலிருந்த அவரது எதிரிகள் சூழ்ச்சி செய்தனர். இதையறிந்த நாயகம், மெக்காவிலிருந்து மெதினாவுக்கு தப்பிச் சென்றார். அவரை பிடிக்க முடியாத எதிரிகள், நாயகத்தை பிடிப்பவர்களுக்கு பரிசு தரப்படும் என அறிவித்தனர். அந்த பரிசைப் பெற வேண்டுமென விரும்பிய, சுராக்கா என்ற எதிரி, நபிகள் நாயகம் ஒளிந்திருந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு சென்றான். அங்கு நாயகம் அவரது தோழர் அபூபக்கருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அபூபக்கர் மிகவும் பயந்த நிலையில் இருந்தார். நாயகம் அவரை சாந்தப்படுத்தும் விதமாக, இறைவன் நம்முடன் இருக்கிறார். அபூபக்கரே! நீங்கள் பயப்பட வேண்டாம், என்றார். அத்துடன் இருவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். அந்த பிரார்த்தனையின் பலனாக, சுராக்கா சென்ற குதிரை அந்த இடத்திலிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் திணறியது. பயந்துபோன சுராக்கா நபிகளாரிடம் சென்று மன்னிப்பு கேட்டான். நாயகமும் அவன் வருந்தும்படியாக சிறு வார்த்தைகூட பேசாமல், புன்னகையுடன் அவனை மன்னித்து அனுப்பிவிட்டார். தன்னை காட்டிக் கொடுக்க வந்தவர்களை மன்னிக்கும் குணம் எத்தனை பேருக்கு வரும்? அந்த குணத்துக்கு சொந்தக்காரர் நபிகள் நாயகம். நாமும் நாயகம் காட்டிய வழியில் எதிரிகளிடமும் அன்பு செலுத்த உறுதியெடுப்போம்.