புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பொங்கல் விழா
புதுச்சேரி: அரசு கல்லுாரிகளில் பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நேற்று காலை, கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி வளாகத்தில், மாணவிகள் பாரம்பரிய மணம் மாறாமல் வண்ணக் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, புது பானையில், சர்க்கரை பொங்கல் மற்றும் சிறுதானிய பொங்கல் வைத்து கொண்டாடினர். கோரிமேடு அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மையத்தில் நடந்த பொங்கல் விழாவை கல்லுாரி புல முதன்மையர் முரளி துவக்கி வைத்தார். தொடர்ந்து உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், கபடி, ஓவியம் தீட்டுதல், கோலம் மற்றும் சமையல் போட்டி, சொல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. செவிலியர் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய விழாக்கள் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுவது, ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், கவிஞர்கள் ரவி, மஞ்சுமுருகவேல் பங்கேற்றனர். பெரிய காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லுாரி உட்பட பல்வேறு கல்லுாரிகளில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்து.
காரைக்கால்: காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரி வளாகத்தில் மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினர். கல்லுாரி முதல்வர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர் சங்கத் தலைவர் பாரிஸ் ரவி முன்னிலை வகித்தார். மாணவிகள் சேலை அணிந்து பொங்கலை கொண்டாடினர். கோலப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ேபராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.