உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்தகன்னி பொங்கல் வைத்து கொண்டாடிய மீனவர்கள்!

சப்தகன்னி பொங்கல் வைத்து கொண்டாடிய மீனவர்கள்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலுார் அருகே மோர்பண்ணை கிராமத்தில் சப்தகன்னி பொங்கல் வைத்து மீனவர்கள் கொண்டாடினர்.பொங்கல் வைக்க சில தினங்களுக்கு முன் ஊர் கூட்டம் நடத்தி 7 கன்னி பெண்களை தேர்வு செய்தனர்.

அந்த குழந்தைகள் (ஜன.,15)  மோர்பண்ணை ரணபத்ர காளியம்மன் கோயில் முன் 7 பானைகளில் பொங்கல் வைத்தனர். பொங்கலை காளியம்மனுக்கு படைத்து கிராமமக்கள் ஒன்று கூடி வழிபட்டனர். பின் தென்னை பாளையில் உருவாக்கிய பாய்மர படகில் 7 பானைகளில் எடுக்கப்பட்ட பொங்கல், பூஜைக்குரிய 2 தேங்காய் மூடிகள், பழம், ஊதுபத்தி போன்ற அபிஷேக பொருட்களை வைத்தனர். அந்த படகை மேளதாளத்துடன் கிராமத்தலைவர் மக்குவாட்டர் துரை கடலுக்கு எடுத்து சென்றார்.அவருடன் 7 கன்னி பெண்களும் தலையில் கரகம் சுமந்து சென்றனர். பின் கரக செம்பில் இருந்த மஞ்சள் கலந்த பாலை கடலில் கொட்டி வழிபட்டனர். கிராமத்தலைவர் பாய்மர படகை கடலில் விட்டார்.படகு ஆழ்கடல் நோக்கி சென்றது. அந்த படகில் உள்ள பூஜை பொருட்கள் ஆழ்கடலில் இருக்கும் கங்காதேவியிடம் சேருவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், “எங்களுக்கு வாழ்வு தரும் கடலை கங்காதேவியாக வழிபடுகிறோம். அந்த தேவிக்கு பொங்கல் வைத்து வழிபட்டால் மீன்பிடி தொழில் சிறப்பாக இருக்கும்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !