உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருந்தீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் பணி தீவிரம்!

விருந்தீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் பணி தீவிரம்!

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவில், 1300 ஆண்டுகள் பழமையானது. ஸ்கந்தபுராணத்தில் இக்கோவில் திருத்துடிசையம்பதி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அவினாசி கோவிலில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரரையும், கருணாம்பிகையையும் வழிபட்டார். பின், பசியோடு இக்கோவிலுக்கு வந்தபோது, வேடன் உருவத்தில் சிவனும், பார்வதியும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விருந்து படைத்ததால், இக்கோவில் விருந்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கான திருப்பணி தற்போது விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் உரிய அனுமதி பெற்று கோவில் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, முன் மண்டபம், மூல கணபதி, அரமரத்தடி விநாயகர் கோவில், அம்பாள், பெருமாள், சனீஸ்வரர், காலபைரவர், நவக்கிரக கோவில் கட்டப்பட்டுள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரத்துக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

ராஜகோபுர பணிகள் குறித்து ஸ்த பதி மாரியப்பன் கூறுகையில், “ஐந்து நிலை ராஜகோபுரத்துக்கான அனுமதியை, இந்து சமய அறநிலையத்துறை வழங்கியவுடன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. முதல் கட்டமாக, 10 அடி ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டப்பட்டது. தற்போது, அரசு அதிகாரிகள் ஆலோசனைப்படி, மேலும் இரண்டு அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. முதலில் கல்காரமும், தொடர்ந்து, 36 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரமும் அமைக்கப்படும். மொத்தம், 52 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமையும். இதில், கிழக்கு பக்கமாக உள்ள ராஜகோபுரத்தில் சிவ முகூர்த்தங்கள் எனப்படும் சிவ வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை சித்தரிக்கும் சம்பவங்கள் அமைக்கப்படும்.

தெற்குபக்கம் தட்சிணாமூர்த்தி சுவாமி சிலைகளின் பல்வேறு வடிவங்கள் அமைக்கப்படும். கோபுரத்தின் வடக்கு பக்கம் பிரம்மா வின் பல்வேறு வடிவங்கள் அமைக்கப்படும். இது தவிர, கோபுரம் முழுவதும் இறை நிலையை போற்றும் சிலைகள் அமைக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !