ஆல்கொண்டமால் கோவில் திருவிழா கோலாகலம்: கால்நடை உருவபொம்மையுடன் வழிபாடு
உடுமலை: உடுமலை அருகே நடந்த ஆல்கொண்டமால் கோவில் (மாலகோவில்) திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி, கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான திருவிழா, ஜன., 16ம் தேதி காலை, 5:00 மணிக்கு, சிறப்பு பூஜையுடன் துவங்கியது; சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பால் கொண்டு வந்து சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.
திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் நலன் வேண்டி வழிபாடு நடத்தும், தமிழர் திருநாள் திருவிழாவாக, இக்கோவில் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது, கால்நடைகளின் உருவ பொம்மைகளை வைத்து, விவசாயிகள் வழிபடுகின்றனர். திருமால் எழுந்தருளியுள்ள இக்கோவில் பகுதியில், சுயம்பாக உருவான லிங்க வடிவ புற்றுக்கு, மாடுகள் பால் சொரிந்தது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது ஆல்கொண்டமால் கோவில்.கோவிலில் தமிழர் திருநாள் திருவிழா, ஜன., 16ம் தேதி காலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் துவங்கியது.
சிறப்பு பூஜை: திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், 11:00 மணிக்கு, சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று காலை அதிகாலை முதல் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன், மாட்டு வண்டிகளில், கோவிலுக்கு வந்தனர். கோவில் அருகில் உள்ள காலி இடங்களில், தங்கள் வண்டிகளை நிறுத்திவைத்து, டென்ட் அமைத்து, சுவாமிக்கு பொங்கல் வைத்தனர். இத்துடன், தங்கள் பசு, எருமைகளில் கறந்த பாலை கொண்டு வந்தும், கால்நடைகளின் உருவ பொம்மைகளை வைத்தும், சுவாமியை வழிபட்டனர்.
இன்று வாணவேடிக்கை: விழாவின், நிறைவு நாளான இன்று காலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, மகா அபிேஷகமும் நடக்கிறது. அபிேஷகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு, மகா தீபாராதனையும், 9:00 மணிக்கு, சுவாமி வீதியுலா, வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. வீதியுலா நிறைவில், சுவாமிக்கு மகா தீபாராதனை செய்யப்படுவதுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்: ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூரில் இருந்து 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில், கால்நடைகளுக்கு தேவையான கயிறு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதற்காக மாடு, ஆடு, நாய், பாதங்கள் உட்பட பலவகையான உருவபொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. குட்டீஸ்களை கவரும் வகையில் ராட்டினங்கள் மற்றும் பல வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புல்லாங்குழல், கரடி, நாய் பொம்மைகள் இன்னும் பல விளையாட்டு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உடுமலை சுற்றுவட்டாரம், திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர் மற்றும் மாட்டு வண்டிகளில் வரும் பக்தர்களுக்கு, குறிஞ்சேரி, புக்குளம் பகுதிகளில், இலவச நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.