திருத்தணி கோவில்களில் மலைச்சுற்று விழா
திருத்தணி; திருத்தணி பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த மலைச்சுற்று விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மலைப்பகுதியில் அமைந்துள்ள சிவசக்தி சித்தேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, மலைச்சுற்று விழா நடத்தப்படுகிறது. நேற்று மலைச்சுற்று விழாவையொட்டி, மூலவர் ஈஸ்வரனுக்கு, காலை 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 2:00 மணி வரை, பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, இரவு 7:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை, கோவில் வளாகத்தை, 108 முறை சுற்றி வந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கைலாச பிரம்மா கோவில், அகூர் அகத்தீஸ்வரர் கோவில், லட்சுமாபுரத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில்கள், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில், சுவாமி திருவீதியுலா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.