சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு இன்று குருதி பூஜை!
சபரிமலை: சபரிமலையில் நெய் அபிஷேகம் நேற்று காலை நிறைவு பெற்றது. இன்று இரவு 10 மணிக்கு மாளிகைபுறத்தில் குருதிபூஜை நடக்கிறது. நாளை காலை நடை அடைக்கப்படுகிறது. மண்டல, மகரவிளக்கு காலங்களில் 60 நாட்களாக நடந்த நெய்யபிஷேகம் நேற்று காலை 10.30 மணிக்கு நிறைவு பெற்றது. அதன் பின், கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு களபபூஜை நடத்தினார். பிரம்மகலசம் பூஜித்து அதில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி எடுத்து கோயிலைவலம் வந்தார். பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் களபம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சபூஜை நடைபெற்றது. நேற்று சரங்குத்தி வரை சென்ற மாளிகைப்புறத்தம்மன் பவனி பின்னர் கோயிலுக்கு திரும்பியது.இன்று காலை நான்கு மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், நெய் அபிஷேகம் கிடையாது. இன்று வரும் பக்தர்கள் நெய்யை கோயிலில் கொடுத்து விட்டு அபிஷேகம் செய்த நெய்யை பிரசாதமாக பெற்று செல்லலாம். இரவு 10 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடைபெறுகிறது. இன்று இரவு 10 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. நாளை காலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர் 6.30 மணிக்கு கோயில் நடை அடைத்ததும் திரு ஆபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும்.