18 ஆண்டுகளுக்குப் பிறகு பண்ணாரி கோவிலில் கும்பாபிஷேகம்!
சத்தியமங்கலம்: பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதையொட்டி கோவில் கோபுரத்தில் நேற்று கலசங்கள் பொருத்தப்பட்டன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநில பக்தர்களும் இங்கு அதிகம் வருவர். கடைசியாக கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 1998ல் செப்.,3ம் தேதி நடந்தது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, யாகவேள்வி தத்துவ ஹோமங்கள் நடந்தது. இதை தொடர்ந்து, பூஜை செய்யப்பட்ட கலசங்கள் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பொருத்தப்பட்டன. மாலை, 5 மணிக்கு மூன்றாம் கட்ட யாக பூஜைகளும், தீபாரதனையும் நடந்தது. இரவு, 8 மணிக்கு பண்ணாரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு வேள்வி பூஜை நிறைவு நிகழ்ச்சியும் நடந்தது. கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று காலை, 7 மணிக்கு நான்காம் கட்ட யாக பூஜையுடன் தொடங்குகிறது. கும்பாபிஷேகம் காலை, 10.10 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பாபி?ஷக சிறப்பு அதிகாரி, சேலம், இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் மங்கையர்கரசி தலைமையில், பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.