உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொம்மடிக்கோட்டை பாலா சேத்திரம்ஸ்ரீ வாலை குருசுவாமி கோயில்

கொம்மடிக்கோட்டை பாலா சேத்திரம்ஸ்ரீ வாலை குருசுவாமி கோயில்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை கிராமத்தில், பாலா சேத்திரம் என்ற ஞானியார் மடம்,ஸ்ரீ வாலைகுருசாமி, அவரது சீடர் காசியானந்தா சுவாமி கோயில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து திசையன்விளை செல்லும் வழியில் 27 கி.மீ.,தொலைவில் சுற்றிலும் தோப்புகளும், பூஞ்சோலைகளும் எழில் கொஞ்சி விளையாடும், இயற்கை சூழலில் பாலா சேத்திரம் என்னும் ஞானியார் மடம் ஸ்ரீவாலைகுருசுவாமி கோயில் அமைந்துள்ளது.

கோயில் வரலாறு: ஸ்ரீபாலா என்னும் அம்பிகை ஸ்ரீவாலைகுருவையும், அவரது சீடர் காசியானந்தரையும், வட இந்தியாவில் இருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது குடிகொண்டிருக்கும் புண்ணிய பூமிக்கு அழைத்து வருகிறாள். தன் மனதில் இடம் பிடித்த வாலை குருவையும், காசியானந்தரையும் பிரதானப்படுத்தி, வரைபடமும் தந்து, ஆலயத்தையும் வடிவமைத்து தந்திருக்கிறாள். சாதாரண மனிதர்களுக்கு வாலைகுருவே பூலோகத்தின் கடவுளாக உள்ளார். பூமியில் உள்ள அசையும், அசையா பொருட்கள் போன்ற அனைத்து அவதாரங்களையும் குருவே ஞானப்பாதையில் அழைத்து சென்று அவரவர்கள் அவதார நோக்கத்தை அறியச்செய்கிறார்கள். இதனையே திருமூலரும் திருமந்திரத்தில் ""குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தி, என்கிறார்.

வாலாம்பிகை: சித்தர்களான அகத்தியர்,திருமூலர்,நந்திசர்,போகர், கொங்கணர், அவர்களது சீடர்கள் அனைவரும் தெய்வம் ஸ்ரீவாலையாவாள். சித்தர்களின் மேலான தெய்வம் வாலைதான். வாலை என்பது சிறு குழந்தையை போல் விளையாட்டில் ஆசை கொண்டதால், வாலை என்னும் பெயர் அம்பிகைக்கு ஏற்பட்டது. வாலை என்ற சொல்லின் சமஸ்கிருத சொல் பாலா என்பதாகும். லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின் போது தோன்றியவள் பாலாதேவி.இந்த பாலாதேவிதான் வாலாம்பிகையாவார்.

குருவின் அருள்: கொம்மடிக்கோட்டையில் குடி கொண்டுள்ள ஸ்ரீவாலைகுருசுவாமியும், அவரின் சீடர் காசியானந்தரும் வாலையை வழிபட்டு சித்தி பெற்று, தன் தாயின் பெயரையே தன் பெயரில் பெற்றுள்ளார்கள். ஸ்ரீவாலைகுருசுவாமியும், ஸ்ரீகாசியானந்தரும் ஒரே கருவறையில் அருள் பாலிக்கிறார்கள். இவர்கள் இருவரையும் முழுமையாக சரண் அடைந்து குருவின் அனுக்கிரகத்தை முதலில் பெற்று, ஸ்ரீவாலையை வணங்கினால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். குருவருள் இருந்தால் தான், வாலையின் அருள் கிட்டும். வாலை தனது இடக்கரத்தில் புத்தகத்தை ஏந்தியிருப்பது, சகல வித்தைகளையும் சாதகர்களுக்கு வழங்கவும், மறு கரத்தில் கொண்டுள்ள ஜெபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அபய வரத கரங்கள் பக்தர்களை காக்கவும், கேட்ட வரங்களை தர தயாராக உள்ளன. நித்ய கல்யாண சீலையான இவள், சகல நலன்களையும் தந்து இம்மையில் தந்து,மறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள். ஒரே இடத்தில் குருவின் தரிசனமும், ஸ்ரீவாலாம்பிகையின் தரிசனமும் கிடைப்பது அற்புதத்திலும், அற்புதம்.

பிரகார சன்னிதிகள்:
அணிக்கை விநாயகர்,ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜர் மாணிக்கவாசகர் சன்னிதி,ஸ்ரீமனோண்மனி அம்பாள்,சமேத ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தி, கன்னி விநாயகர்,பாலமுருகன், சண்டிகேஷ்வரர்,நவக்கிரக சன்னிதிகள்,பிரதோஷ நந்தி , நித்தியானந்த மண்டபத்தில் அருள் புரியும் அன்னபூரணி சன்னிதி, ஸ்தல விருட்சமான மஞ்சணத்தி மரத்தடியில் உச்சிஷ்ட கணபதி, என, பல்வேறு சன்னிதிகள் அமைந்துள்ளன.

திருமாத்திரை: ஸ்ரீவாலைகுருசாமியே நேரில் வந்து திருமாத்திரை கொடுத்து பக்தரை பெரும் பிணியில் இருந்து காத்தருளியதாக ஐதீகம். இன்றும் கோயிலில் உள்ள வேப்பிலை, மஞ்சணத்தி, வில்வம்,புளிய இலைகளுடன், எலுமிச்சை சாறு, இவற்றுடன் திருநீறு,மற்றும் திருமண் சேர்த்து பிரகாரத்தில் உள்ள அம்மிகளில் அவர்களே அரைத்து இறைவன் திருவடியில் வைத்து பின் அருந்தினால் அக, புற நோய்களுக்கு அரு மருந்தாகிறது, என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாக்கள்: ஆவணி திருவிழா: ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் ஆரம்பம். 11 நாள் திருவிழா.

சித்திரை திருவிழா: சித்திரை முதல் தேதியில் இருந்து 11 நாள் திருவிழா.

நவராத்திரி: ஒன்பது நாளும் மாலை ஸ்ரீவாலாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்,லலிதா சகஸ்ர நாம பராயணம்,திருவிளக்கு பூஜை, கொலு பூஜை.சிவராத்திரி: இரவு நான்கு கால பூஜை, மற்றும் அபிஷேகம்.ஆருத்ரா தரிசனம்: ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜ மாணிக்கவாசகருடன் வீதியுலா, மார்கழி மாதம் முழுவதும் பஜனை.

திருக்கார்த்திகை: சிறப்பு பூஜை, சொக்கப்பனை ஏற்றுதல்.
திருக்கல்யாணம்: ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு திருக்கல்யாண உற்சவம்.

மாதம் தோறும்:
பவுர்ணமி உச்சிக்கால தீபாரதனை,தொடர்ந்து அன்னதானம், மாலை சிறப்பு அபிஷேகம்,லலிதா சகஸ்ர நாம பாராயணம்,திருவிளக்கு பூஜை,ஸ்ரீவாலாம்பிகை ஊஞ்சல், தொடர்ந்து பிரகார உலா, தீபாரதனை. அமாவாசை:உச்சிகால தீபாரதனை, தொடர்ந்து அன்னதானம்.தேய்பிறை அஷ்டமி:ஸ்ரீசுவர்ணாகர்ஸண பைரவருக்கு மாலை அபிஷேகம், தொடர்ந்து பூஜை மாதாந்தம்:தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை இரவு லலிதா சகஸ்ர நாம பாராயணம், திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாரதனை.

சங்கடர சதுர்த்தி: உச்சிஸ்ட கணபதிக்கு சிறப்பு வழிபாடு.பிரதோஷ வழிபாடு: பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து ஸ்ரீமனோண்மணி அம்பாள் சமேத ஸ்ரீசந்திரசேகர மூர்த்தி பிரகார உலா.

வாரம் தோறும்: வெள்ளிக்கிழமை இரவு தோறும் லலிதா சகஸ்ர நாம பாராயணம், திருவிளக்கு பூஜை, தொடர்ந்து தீபாரதனை. நித்திய பூஜை: தினசரி நான்கு கால வேளை பூஜை நடந்து வருகிறது. காலை 5 மணிக்கு நடை திறப்பு. இரவு 7.30 முதல் 8.30 மணிக்கு நான்காம் கால இரவு பூஜையுடன் நடை சாத்துதல். கோயிலுக்கு செல்ல: திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் ரோட்டில் 27 கி.மீ., ல் கொம்மடிக்கோட்டை கிராமத்தில் பாலாசேத்திரம் எனும் ஞானியார் மடம் ஸ்ரீவாலைகுரு சுவாமி கோயில் அமைந்துள்ளது. திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி ஆகிய ஊர்களில் இருந்து 11 கி.மீ., தூரத்தில் உள்ளது.
தொலை பேசி எண்: 04639 253 611, மொபைல் எண்: 98421 53475.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !