உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ, சிவ கோஷத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

சிவ, சிவ கோஷத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரம்,: சிவ, சிவ கோஷம் விண்ணதிர, மங்கலக்குலவை ஓங்கி ஒலிக்க, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ராவணனை அழித்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவ பூஜை செய்ய ராமன் விரும்பினார். இதற்காக கயிலாயம் சென்ற ஆஞ்சநேயர், சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், சீதாதேவி மணலால் உருவாக்கிய லிங்கத்தை ராமன் வழிபட்டார். ராமன் ஈஸ்வரனை வழிபட்டதால் இத்தலம் ராமேஸ்வரம் எனப் பெயர் பெற்றது. காசிக்கு நிகரான யாத்திரை ஸ்தலமாகவும், பித்ரு தோஷ நிவர்த்திக்கான பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது. உலக பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக ரூ.7.90 கோடி செலவில் திருப்பணிகள் நடந்தன. 400 ஆண்டுகள் மொட்டையாக இருந்த வடக்கு, தெற்கு கோபுரங்கள் நன் கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் சீரமைக்கப்பட்டன.ஜன., 15 ல் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

ஜன., 16 காலை 8:45 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு 108 யாக கும்பங்களுடன் முதல்கால ஹோமம் துவங்கியது. நேற்று காலை 5:30 மணிக்கு 8 ம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு யாகசாலை பந்தலில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. 9:30 மணிக்கு புனித நீர் அடங்கிய கும்பங்குடன் சிவாச்சாரியார்கள் கோபுரம், விமானங்களுக்கு சென்றனர். கோயிலை சுற்றி கருடன் வட்டமிட்டதும் சரியாக காலை 10:15 மணிக்கு அறநிலையத்துறை துணை ஆணையர் கவிதா, இணை ஆணையர் செல்வராஜ் பச்சை கொடி அசைத்தனர். பக்தர்களின் சிவ, சிவ கோஷமும், பெண்களின் மங்கல குலவையும், சிவாச்சாரியார்களின் வேத மந்திரமும் ஓங்கி ஒலிக்க 4 ராஜகோபுர கலசங்கள், மூலஸ்தானம், விஸ்வலிங்கம், பர்வதவர்த்தினி அம்பாள், விசாலாட்சியம்மன் உட்பட 22 விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டன. புனிதநீர் 10 துாவான்கள் (ஸ்பிரிங்ளர்கள்) மூலம் தெளிக்கப்பட்டது. ஆங்காங்கே பெரிய திரை டிவிக்கள் வைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. சிவாலய இசைக்கருவியான திருச்சின்னம், சங்கு இசைக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்னிஹோத்திரி, தேவதாஸ், மகாதேவன், சொக்கலிங்கம், கோயில் தக்கார் குமரன் சேதுபதி, கோட்ட பொறியாளர் மயில்வாகணன் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ராமநாதசுவாமிக்கும், பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

விழா துளிகள்
* முதல்முறையாக 4 கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
* 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
* மேற்கு கோபுரம் அருகே சட்ட விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
* அக்னி தீர்த்தக்கரை மற்றும் ரத வீதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் தீர்த்தங்கள் சாத்தப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !