உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் தங்க கோபுரத்திற்கு கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்!

ஸ்ரீவி., ஆண்டாள் தங்க கோபுரத்திற்கு கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்!

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இந்தியாவிலே உயர்ந்த தங்க கோபுரம் அமைக்கப்பட்ட நிலையில், நேற்று பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயிலில் உள்ள விமான கோபுரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுரத்தை விட உயர்ந்தது. இந்த கோபுரம் நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் மூலம் தொழில்அதிபர்கள் மற்றும் பக்தர்களின் நன்கொடையால் ரூ. 25 கோடி செலவில், 76 கிலோ தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலே மிக பெரிய தங்க விமான கோபுரம். இந்த கோபுரத்திற்கான கும்பாபிஷேக விழா கடந்த ஜன.,16ல் யாக சாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

புனித நீர்இதையொட்டி அதிகாலையில் விஸ்வரூபம், புண்யாஹவாசனம், மஹாபூர்ணஹுதியுடன் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க, தங்க விமான கோபுர கலசத்திற்கு முத்துபட்டர், கிரிபட்டர் தலைமையிலான பட்டர்கள் புனிதநீர் ஊற்ற காலை 10.05 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதேநேரத்தில் ஆண்டாள் ராஜகோபுரம், பரிவாரங்கள் மற்றும் கருடாழ்வார் விமான கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்களின் கோவிந்தா, கோபாலா, ஓம் நமோ நாராயணா கோஷங்கள் விண்ணதிர முழுங்கின. இதன்பின் கோயில் மாடத்தில் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் தெளிப்பான் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சசிகலாதிருப்பதி ஜீயர் சுவாமிகள், மணவாளமாமுனிகள் மடத்தின் ஜீயர் சுவாமிகள், நாங்குனேரி வானமாமலை மட ஜீயர் சுவாமிகள்,முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தென்காசி எம்.பி.,வசந்திமுருகேசன், ராம்கோ தலைவர் ராமசுப்பிரமணியராஜா, அறநிலையத்துறை உதவி ஆணையர் திருமகள், தக்கார் ரவிசந்திரன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னாரை தரிசித்தனர்.

1400 போலீசார்: விருதுநகர் எஸ்.பி., அரவிந்தன் தலைமையில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். 46 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, நான்கு மோப்பநாய் படை பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கண்காணிப்பு பணியில்ஆளில்லாத குட்டி விமானம் சிசிடிவி கேமராக்கள் மூலம், மக்கள் நெரிசல், வாகனங்கள் ஒரே இடத்தில் சேரவிடாமல் போக்குவரத்து ஒழுங்குபடுத்த, கண்காணிப்பு கேமரா பொருத்திய ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டது.

விழாத்துளிகள்

* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தங்க விமான கும்பாபிஷேகத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் காலில், தென்காசி தொகுதி எம்பி., வசந்தி முருகேசன் விழ முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத சசிகலா உடனே அங்கிருந்து விலகி சென்றார்.
* சசிகலா, கும்பாபிஷேகம் நடக்கும் இடத்திற்கு செல்வதற்கு வசதியாக ஆண்டாள் சன்னதி பிரகாரத்திலிருந்து அமைக்கப்பட்ட லிப்ட்டில் பச்சை நிற கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
* பாஸ் உள்ளவர்கள் மட்டும் கோயிலின் மேல்மாடத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் கோயிலை சுற்றி உள்ள மாடவீதிகள், நான்கு ரதவீதிகள் மற்றும் வீடுகளின் மொட்டைமாடியில் இருந்து கும்பாபிஷேகத்தை பார்த்தனர்.
* கும்பாபிஷேகத்திற்கு பின் கோயிலின் மேல்மாடத்திலிருந்தவர்கள் வெளியேறுவதில் தாமதம்ஏற்பட்டதால், வெளியே இருந்த பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில் சிரம மேற்பட்டது. அவர்களை போலீசார் கட்டுப்படுத்தி யதால், தள்ளுமுள்ளுஏற்பட்டது.
* கோயில் நிர்வாகம் சார்பில் நான்கு திருமண மண்டபங்கள், மடங்களில் அன்னதானம் வழங்கப் பட்டது.
* பல்வேறு கிராமங்களை சேர்ந்த பஜனைகுழுவினர் திருப்பாவை பாடல்பாடி நடனமாடியது பக்தர்களை ஈர்த்தது.
* கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றியமைக்கபட்டதால் குறுகிய வீதி, பஜார்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
* நான்கு ரதவீதிகளிலும் அகன்ற திரையில், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !