பழநியில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு: இரவில் நடைபயணத்தை தவிர்க்கவும்
திண்டுக்கல் :பழநி தைப்பூசத்தையொட்டி 3 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 100 இடங்களில் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
பழநி தைப்பூச விழா ஜன.,13ல் துவங்கி கொடியேற்றுவிழா கடந்த ஜன.,18ல் நடந்தது. தைப்பூசம் ஜன.,24ல் நடக்கிறது. இதனால் காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, கரூர் உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மூவாயிரம் போலீசார்பழநி தைப்பூசத்தையொட்டி 3 நாட்களுக்கு 3 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருட்டு மற்றும் தகாத சம்பவங்களை தடுக்க ஆங்காங்கு 100 கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. பல இடங்களில் வாட்சிங் டவர் அமைத்தும் மேற்பார்வையிடப்படுகிறது. மலைக்கோயிலில் அமர தடைபழநி தைப்பூசத்தன்று மலைக்கோயிலில் நெரிசலை தவிர்க்க ஆயிரம் ஆயிரம்பக்தர்களாக பிரித்து அனுப்புவதற்கும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுவாமி தரிசனம் முடித்தவுடன் அங்கே அமராமல் உடனே கீழே இறங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சரவணன் எஸ்.பி., கூறியதாவது:கோயில் முழுவதும் அதிரடிப்படை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பல இடங்களை கேமராக்கள் மூலம் கண்காணிக்கிறோம். விபத்து,வழிப்பறியை தவிர்க்க பக்தர்கள் இரவில் 10 மணிக்கு மேல் நடக்க வேண்டாம். வாகனங்களையும் மெதுவாக ஓட்டிச் செல்லும்படி அறிவுறுத்தி வருகிறோம். மலைக்கோயிலில் அனைத்து பக்தர்களும் சுவாமிதரிசனம் செய்யவேண்டும். பலர் கியூ வில் காத்துக் கொண்டு இருப்பதால், அங்கு உட்கார தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.