1,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் இடித்து தரைமட்டம்: பிளாட் போட்டு விற்க முயற்சி
வேலூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, பிளாட் போட்டு விற்க முயற்சி நடந்தது. இதை கண்டித்து, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை அடுத்த வன்னிவேட்டில், 1,000 ஆண்டுகள் பழமையான வினாயகர், சிவன் கோவில்கள் அடுத்தடுத்து, ஒரே இடத்தில் உள்ளன. வினாயகர் கோவிலில் இருந்த சிலையை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். சிவன் கோவிலில் மட்டும் சிலை இருந்து. இங்கு மட்டும் பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில், விண்ணம்பள்ளி அடுத்த கொடுக்கந்தாங்கலைச் சேர்ந்த வெங்கடேசன், 25, என்பவர் தலைமையில், 25 பேர், நேற்று முன் தினம் இரவு, 10 மணிக்கு, நான்கு பொக்லைன் இயந்திரத்தை வைத்து, சிவன் கோவிலை இடித்தனர். அங்கிருந்த சிவன் சிலையை அகற்றினர். நேற்று காலை, 6 மணிக்கு, பக்கத்தில் இருந்த வினாயகர் கோவிலை இடிக்கும் பணி துவங்கியது. அங்கிருந்தவர்கள் போலீஸ், வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. இந்து முன்ணனி நகர பொதுச் செயலாளர் மோகன் தலைமையில் சென்றவர்கள், வினாயகர் கோவிலை இடிக்கும் பணியை நிறுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, வாலாஜா பேட்டை போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், இரு கோவிலையும் இடித்து விட்டு, அந்த இடத்தை பிளாட் போட்டு விற்க திட்டமிட்டது தெரியவந்தது. இது குறித்து இந்து முன்னணி நகர பொதுச் செயலாளர் மோகன் கூறுகையில், வருவாய்த்துறையினர் ஆதரவுடன் ஆவணங்களை திருத்தி, கோவில்கள் உள்ள இடத்தை பட்டா போட்டுக் கொண்டுள்ளனர். இப்போது இதை பிளாட் போட்டு விற்க திட்டமிட்டுள்ளனர், என்றார். இந்து முன்னணி நகர பொதுச் செயலாளர் மோகன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வினாயகர் கோவிலை இடிக்க தடை விதித்துள்ளனர்.