அழிந்துவரும் பழங்கால கல் திட்டைகள்!
குமணந்தொழு ஊராட்சி உட்பட்ட மண்ணூத்து கோயில் காட்டில் பழங்கால பொக்கிஷமான கல் திட்டைகள் அழிந்து வருகிறது. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடமலை-மயிலை ஒன்றியம் குணந்தொழு ஊராட்சிக்கு உட்பட்ட மண்ணூத்து, வெம்பூர், கணேசபுரம் மலைப்பகுதிகளில் வசித்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைத்து, அதற்கு அடையாளமாக ஒவ்வொரு இடத்தில் 15 முதல் 20 அடி உயரம் கொண்ட கல் திட்டை வைப்பது நீண்ட நெடுங்காலமாக இருந்தது. இந்த இடத்தை கற்கால மனிதர்கள் தெய்வமாக வழிபட்டும், பூஜைகள் செய்தும் வந்தனர். இவ்வாறு வாழ்ந்த இந்த இடத்திற்கு கோயில்காடு என முன்னோர்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர்.
இந்த கல் திட்டை 3 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. இதன் பெருமையறியாதவர்கள் கல் திட்டை களை அழித்தும், சேதபடுத்தியும் விட்டனர். முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக உள்ள கல் திட்டை களை மேலும் அழியாமல் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2,500 ஆண்டுகளுக்கு முந்தயை இந்த கல் திட்டை குறித்து தானம் அறக் கட்டளை பணியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி தலைவர் செல்வராணி கூறுகையில் பழங்கால பொக்கிஷமான கல்திட்டைகள் அழிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். முன்னோர்கள் தெய்வமாக வழிபட்ட இந்த கோயில்காட்டினை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்றார்.