தென் ஆப்ரிக்காவில் மகா சிவராத்திரி யாத்திரை!
ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் பிப்ரவரி 28ம் தேதியன்று மகா சிவராத்திரி யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரை தென் ஆப்ரிக்க தலைநகரான ஜேகன்னஸ்பர்க் நகரின் லெனாசியா தெற்கு பகுதியில் உள்ள சுமார் 8 கி.மீ., செல்லும். 24வது ஆண்டாக இந்து ஒருங்கிணைப்பு கவுன்சிலால் நடத்தப்படும் இந்தவருடாந்திர மகா சிவராத்திரி யாத்திரையில் பல அலங்கார வண்டிகள் இடம் பெறும். காலை 6 மணிக்கு டிரான்ஸ்வால் ஆந்திர சபாவில் ஹோமத்துடன் துவங்கும் இந்த யாத்திரை, ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஈஸ்வரர் கோயிலில் முடிவடையும். அங்கு அனைவருக்கும் விருந்து அளிக்கப்படும். ஹோமத்தின்போது, "மத, நிற, இன வேறுபாடின்றி ஒவ்வொருவருக்கும் அமைதி" ஏற்பட பிரார்த்தனை நடைபெறும். இந்த யாத்திரையில் பங்கேற்பவர்கள் வெள்ளை உடையில் வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மார்ச் 7ம் தேதி நடைபெற இருக்கும் மகா சிவராத்திரிக்கு முன்னோடியாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.