பெங்களூர் கோயில்கள்
பிள்ளையார் கோயில்: பெங்களூர் பசவனகுடியில் நந்தி கோயிலுக்கு அருகே எழுந்தருளியுள்ளார் தொட்டகணபதி. தொட்ட என்றால் கன்னடத்தில் பெரிய என்று பொருள். ஒரே பாறையில் பெரிய அளவில் விநாயகரின் திருஉருவம் மேற்குநோக்கி செதுக்கப்பட்டுள்ளது. மூன்று நிலை ராஜகோபுரத்தோடு மிக அழகாக இந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பெங்களூரில் புதிய வாகனங்கள் வாங்குவோர் முதலில் இந்த கணபதிக்கு பூஜை செய்த பிறகே வாகனத்தை ஓட்டுகின்றனர். இந்தப் பெரிய விநாயகர் விபத்தைத் தவிர்த்து சுபிட்சத்தை அளிப்பார் என பக்தர்கள் நம்புகின்றனர்.
அனுமன் கோயில்: பெங்களூர் ஜெயநகர் ஒன்பதாவது பிளாக்கில் அமைந்துள்ளது. ராகிகுண்டடா பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில். ஒரு காலத்தில் இந்த இடம் ராகி, கேழ்வரகு பயிர் செய்யப்படும் நிலமாகத் திகழ்ந்ததால் இந்தப் பெயரினைப் பெற்றது. அழகிய பூங்கா போல நீருற்றுகளுடன் அமைந்துள்ளது. இக்கோயில் இரண்டு அடுக்குகளாக அமைந்துள்ள இக்கோயிலின் முதல் அடுக்கில், விநாயகர் அருள்பாலிக்கிறார். மேலும் படிகள் ஏறி இரண்டாவது அடுக்கிற்குச் சென்றால் பிரசன்ன ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். புதுமையான இக்கோயிலில் ஆனைமுகனையும் அனுமனையும் தரிசிப்பது மனதுக்கும் உடலுக்கும் குளுமையை அளிக்கிறது.
நந்தி கோயில்: சிவபெருமானின் வாகனம் நந்தி சிவன்கோயில்களில் கொடி மரத்தை வணங்கிய பிறகு, நந்தி தேவரிடம் மானசீகமாக அமைதி பெற்றே சிவபெருமானை வணங்க வேண்டும். இந்திர நந்தி, பிரம்ம நந்தி, விஷ்ணு நந்தி , தரும நந்தி ஆகியவை பஞ்ச நந்திகள் ஆகும்.
பெங்களூர் பசவன குடியில், நந்திதேவருக்கு என தனியே ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் பெங்களூரை நிர்மாணித்த ராஜகேம்பே கவுடாவால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு யானைத் தந்தங்கள் போன்ற அமைப்பு, கோயில் செல்லும் நுழைவாயிலில் காணப்படுகிறது. வடக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. 46 மீட்டர் (135 அடி) உயரமுள்ள ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட நந்திதேவர் வடக்கு நோக்கி அருள் புரிகிறார்.
நந்திதேவரின் பின்னால் சிவ பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தனது வாகனத்திற்குச் சிறப்பளிக்கும் வகையில் சிவபெருமான் இங்கு சிறுவடிவில் காட்சியளிப்பது நந்திக்கு கிடைத்த சிறப்பு. கோயிலுக்கு முன்பு உள்ள பழமைமிக்க அரச மரங்களின் பின்னால் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. நந்திதேவரை வணங்கு; தடை யாவும் விலகும் என்பது ஐதிகம்.