தேர்வு நெருங்கி விட்டது மாணவர்களே படியுங்க இதை!
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நெருங்கி விட்டன. மாணவர்கள் முயற்சித்து படிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது. தேவலோகத்திலுள்ள வைத்தியர்களை அஸ்வினி தேவர்கள் என்று அழைப்பார்கள். மருத்துவத்தில் புகழ் பெற்று விளங்கிய இவர்களுக்கு தன்னை விட புகழ் கூடுகிறதே என்ற பொறாமையில், தேவர் தலைவன் இந்திரன் பல துன்பங்களைத் தந்தான். அந்த வைத்தியர்கள் ஒரு புதிய மந்திரத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினர். அதைப்படித்தால் தங்கள் தொழிலுக்கு மேலும் நலம் பயக்கும் என எண்ணினர். இதையறிந்த இந்திரன் அவர்களுக்கு எந்த ஒரு முனிவரும் அதைக் கற்றுக் கொடுக்கக் கூடாது என கட்டளையிட்டான். அவர்கள் வியாசரின் பரம்பரையில் வந்த தத்யங்கர் என்ற முனிவரைச் சந்தித்து நிலையைக் கூறினர். உங்கள் தலையை தற்காலிகமாக எடுத்து விட்டு ஒரு குதிரையின் தலையைப் பொருத்துகிறோம். அந்தத் தலையுடன் நீங்கள் மந்திரத்தைக் கற்றுக் கொடுங்கள். இந்திரன் கோபத்தில் உங்கள் தலையை வெட்டியதும் நிஜத் தலையைப் பொருத்தி உயிர்பெறச் செய்வோம், என்றனர். அந்த மந்திரம் நோயாளிகளுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்துக்கு சம்மதித்தார் தத்யங்கர். இதையறிந்த இந்திரன் அவரது தலையை வெட்டி விட்டான். அஸ்வினி தேவர்கள் அவரது சொந்தத் தலையைப் பொருத்தி உயிர் பெறச் செய்தனர். மாணவர்களே! அஸ்வினி தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பெரிய இடைஞ்சலை எல்லாம் முறியடித்து மந்திரம் கற்றது போல நீங்களும் சிரமப்பட்டு பாடங்களை படித்து அதிக மதிப்பெண் பெற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும். கேள்வித்தாள் கடினம்... பாடங்கள் கடினம்...நேரமில்லை என சொல்லிக் கொண்டு கடமையில் இருந்து நழுவ முயலக்கூடாது. சரி தானே!