தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசி இருக்கும்!
*எதைத் தேடுகிறீர்களோ அதையே வாழ்வில் பெறுவீர்கள். லட்சியமாக கடவுளைத் தேடுபவன் அவரையே அடைகிறான். செல்வத்தையும், செல்வாக்கையும் தேடுபவன் அவற்றை வாழ்வில் பெறுகிறான். தேடல் உள்ள வரை தான் வாழ்வில் ருசியே இருக்கும்.
*வெளியுலகில் கடவுளைத் தேடுபவன் அறியாமையில் கிடக்கிறான். தனக்குள்ளேயே கடவுள் இருப்பதை அறிபவனே அறிவில் சிறந்தவன்.
*மனிதனின் மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அதை ஒருமுகப்படுத்தி பாதுகாக்கா விட்டால் நாலாபுறத்திலும் கடுகு சிதறி ஓடுவது போல மனமும் வீண் விஷயங்களில் ஈடுபட்டு சிதறிப் போகும். தினமும் வழிபாட்டின் மூலமாக மனதை ஒருமுகப்படுத்துவது அவசியம்.
*இளமையான மூங்கில் சுலபமாக வளையும். முற்றிய மூங்கில் வளைத்தால் ஒடிந்து விடும். அதுபோல இளமைக் காலமே கடவுள் பக்திக்கு ஏற்றது. பெற்றோரே குழந்தைகளுக்கு சிறுவயது முதல்
பக்தியைக் கற்றுத் தர முயல வேண்டும்.
*அகங்காரம் மனிதனை அவ்வளவு எளிதில் விட்டு போவதில்லை. உடல் என்பது இருக்கும் வரை அதன் அடையாளம் சிறிதளவாவது மனிதனுக்கு இருக்கவே செய்கிறது.
*தண்ணீரில் போட்ட கோடு போல, வந்த வேகத்தில் கோபத்தை மறந்து விட வேண்டும். அப்படி வரும் கோபமும் பிறரை திருத்துவதற்காக அமைய வேண்டும். அதுவே நல்லவர்களின் இயல்பாகும்.
*வேதம், புராணம் போன்றவை மனிதர்களால் வாய் விட்டு சொல்லப்பட்டதால் எச்சிலாகி விட்டன. கடவுள் மட்டும் எந்த விதத்திலும் எச்சில்படவில்லை. அதாவது கடவுளை யாராலும் அறிய முடியவில்லை.
* மக்கள் உலக இன்பத்தை விரும்பியே வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். அதனால் துன்பம் நேரும் போதும், உடலை விட்டு உயிர் நீங்கும் போதும் கடவுளின் நினைவு இல்லாமல் இருந்து விடுகிறார்கள்.
*நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கு ஒன்றுமே இல்லை.
கடவுளை முழுமையாக நம்பி விட்ட பிறகு வேறு யாரையும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
*தன்னை மட்டுமே திறமைசாலியாக எண்ணிக் கொள்வது மூடத்தனம். உலகில் ஒவ்வொரு
மனிதனும் ஒவ்வொரு விதத்தில் திறமை கொண்டவனாக இருக்கிறான்.
*செல்வத்தில் பெருமை கொள்ள வேண்டாம். ஏனென்றால் செல்வச் செழிப்பில் மிதக்கும்
பணக்காரர்கள் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள்.
*நீண்ட கால முயற்சியால் மனதை அடக்கியவர்களால் மட்டுமே தனிமையில் இருந்தாலும், கூட்டத்தில் இருந்தாலும் கடவுளைத் தியானிக்க முடியும்.
*ஒன்று என்ற எண்ணுடன் பூஜ்யம் சேரும் போது அதற்கு மதிப்பு உண்டாகும். இந்த ஒன்று போல கடவுளும், பூஜ்யம் போல மனிதனும் இருக்கின்றனர்.
* உண்மையை உணர்த்தும் சாஸ்திரங்களை படிப்பதை விட கேட்பது நல்லது. அனுபவத்தின் வாயிலாக உண்மையை அறிந்து கொள்வது இதை விட சிறந்தது. (ராமகிருஷ்ணர்)