சாமிதோப்பு தலைமைப்பதியில் பொன்வாசல் மண்டபம் திறப்பு
தென்தாமரைக்குளம் : சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் புதிதாக அமைக்கப்பட்ட பொன்வாசல் மண்டபத்தை அமைச்சர் பச்சைமால் நேற்று திறந்து வைத்தார். சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யா வைகுண்டசுவாமியின் பள்ளியறை மூலஸ்தானத்தின் நேர் தரிசனம் செய்யும் வகையில் பதியின் மேற்கு பகுதியில் புதிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அன்னை பொன்னுவெயிலாள் அம்மை பெயரால் ஒரு மணிமண்டபமும், அலங்கார கோபுர மண்டபங்களுடன் கூடிய பொன்வாசல் ஒன்றும் 35 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா நேற்று காலை 9 மணிக்கு நடந்தது.விழாவிற்கு தலைமைப்பதி நிர்வாகி பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். பாலஜனாதிபதி, ஹரிராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய மண்டபத்தை அமைச்சர் பச்சைமால் திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் மண்டபத்தை கட்டிய கட்டட கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் அ.தி.மு.க., மாவட்ட அவைதலைவர் சதாசிவம், ஒன்றிய தலைவர் தம்பிதங்கம், மாணவரணி மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் சுயம்பு செல்வன், மோகன், பொன்ராஜ், கோபுர கட்டட பொறுப்பாளர்கள் இன்ஜினியர் வளவன், பேராசிரியர் தர்மரஜினி மற்றும் அ.தி.மு.க., பிரமுகர்கள், அய்யாவழி சமய தலைவர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.