திருக்கோவிலூர் சக்திமாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சக்திமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி மாரியம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக துவக்க விழா நடந்தது. காலை 7:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்கள் பால்குடம் எடுத்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பகல் 11:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன், சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவமூர்த்தி செண்டை மேளம் முழங்க வீதியுலா நடந்தது. கோவில் நிர்வாகி சக்திவேல், தொழில் அதிபர்கள் தியாகராஜன், செல்வராஜ், கண்ணப்பன், டாக்டர் பால்ராஜ், சாந்திபால், கவுன்சிலர்கள் தங்கராஜ், சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.