சென்னை ஸ்தபதி அங்கீகாரம் நேர்காணல் தீவிரம்
சென்னை: ஆகம விதிப்படி கோவில் பணிகளை மேற்கொள்ள, சிற்ப சாஸ்திரம் அறிந்த ஸ்தபதிகளை கண்டறிவதற்காக, அறநிலையத் துறை சார்பில் நேர்காணல் நடந்து வருகிறது.
தமிழகத்தில், 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஆகம விதிகள், சிற்ப சாஸ்திரம் அறிந்த ஸ்தபதிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். இதனால், புனரமைப்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அறநிலையத் துறை, ஸ்தபதிகளை தேர்வு செய்து அங்கீகாரம் அளித்து வருகிறது. அதன்படி, 2015 அக்டோபரில், ஸ்தபதி அங்கீகாரத்திற்கான அறிவிப்பு வெளியானது; 206 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான நேர்காணல், சென்னையில் உள்ள அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இதுவரை, மூன்று முறை நேர்காணல் நடத்தி, 169 ஸ்தபதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகை மதிப்பீட்டாளர், மர வேலைப்பாடு, கர்ப்பக்கிரக சுதை வேலைப்பாடு, வர்ணம் வேலைப்பாடு உள்ளிட்ட பணிகளுக்கான ஸ்தபதி நேர்காணல் பிப்., 9 முதல் நடந்து வருகிறது. நாளை வரை நடக்கும் நேர்காணலில், சிறந்த ஸ்பதிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்றவர்கள், கோவில் பணிகளுக்கான ஒப்பந்தம் எடுக்க தகுதியானவர்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.