கும்பகோணம் மகாமக குளத்தில் துறவிகள் கங்கா ஆரத்தி பூஜை!
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் நேற்று மாலை, துறவிகள் மற்றும் சர்வதேச வாழும் கலை மைய நிறுவனர் ரவிசங்கர்ஜி என, 1,000க்கும் மேற்பட்டவர்கள் கங்கா ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மகாமகம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து குளத்தில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என தினமும், லட்சத்திற்கு அதிகமானவர்கள் புனித நீராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று காலை, கோவிந்தபுரத்தில் அகில பாரத துறவிகள் மாநாடு துவங்கியது. மாநாடு தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.இதற்கு, நாடு முழுவதும் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட துறவிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை, அரசலாற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, துறவிகள் வாத்தியங்கள் முழங்க, ஆட்டம் பாட்டம் என ஊர்வலமாக மகாமகக் குளத்திற்கு வந்தனர். அங்கு வந்த, சர்வதேச வாழும் கலை மைய நிறுவனர் ரவிசங்கர்ஜி, குளத்தில் தாமரை மலரை துாவி, கங்கா ஆரத்தி எடுத்து வழிபட்டார். அதன்பின், அங்கு இருந்த, 1,000க்கும் மேற்பட்ட துறவிகளும் கங்கா ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.