நிதி பற்றாக்குறையால் பாதியில் நிற்கும் உத்தரகோசமங்கை கோயில் திருப்பணி
ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை கோயில் திருப்பணிகள் பாதியில் நிற்பதால் பக்தர்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர்.
உத்தரகோசமங்கையில் பழமையான மங்களநாதர் கோயில் உள்ளது. அங்கு 3 ஆயிரம் ஆண்டு இலந்தை மரத்தடியில் இறைவன் சுயம்புவாக தோன்றியுள்ளார். அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு மாணிக்கவாசகர் லிங்கவடிவில் உள்ளார். அரிதான மரகத நடராஜர் சிலை உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் ஆருத்ரா தரிசனம் நடக்கும். மற்ற நாட்களில் சந்தனக்காப்பு சார்த்தப்பட்டிருக்கும். இக்கோயிலில் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ள பகுதிகளை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழமை மாறாமல் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு
செய்யப்பட்டது.
அறநிலையத்துறை சார்பில் முதற்கட்டமாக 2011–12 ல் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் சுவாமி சன்னதியின் வடக்கு, தெற்கு சித்திர மண்டபம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டமாக 2012–13 ல் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் மேற்கு சித்திர மண்டபம், சுவாமி சன்னதி முதல்பிரகாரத்தின் தெற்கு பகுதியில் 3 பத்திகளில் பாவுகல் (மேற்கூரை) அமைக்கும் பணிகள் முடிந்தன. இன்னும் 32 பத்திகளில் பாவுகல் அமைக்கப்படவில்லை. இதனால் திறந்த வெளியாக உள்ளது. நிதி பற்றாக்குறையால் ஓராண்டிற்கு மேலாக பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், “ரூ.1.5 கோடியில் திட்டம் தயாரித்து அறநிலையத்துறைக்கு அனுப்பியுள்ளோம். நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும்,” என்றார்.