ராமேஸ்வரம் கோயிலில் ரஷ்ய பக்தர்கள் தரிசனம்
ராமேஸ்வரம்: ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ரஷ்ய பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஆன்மீக இயக்கத்தை சேர்ந்த பக்தர்கள் 15 பேர் பிப்.,21 ராமேஸ்வரம் வந்தனர். அக்னிதீர்த்த கடலில் புனிதநீராடிய பின் கடற்கரையில் அமர்ந்து மணலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மலர்கள் தூவி வழிபட்டனர். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் 22 புனித தீர்த்தங்களில் நீராடியபின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர். பிரசித்த பெற்ற கோயில் மூன்றாம் பிரகாரம் மற்றும் தூண்கள், கதைகள், ஒவியங்களை கண்டு ரசித்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் குழுவினர் கூறியதாவது: கலை, கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பின்பற்றும் ஒரே நாடு இந்தியா தான். யோகா கலையின் பிறப்பிடமும் இந்தியா தான். ராமேஸ்வரம், காசி, ஒடிசா, திருவனந்தபுரம் கோயில்களை தரிசித்து வருகிறோம். இங்குள்ள கோயில்கள் மன அமைதியும், ஞானமும் கற்றுக் கொடுக்கிறது. இங்கு தரிசிப்பதை நாங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம், என்றனர்.