உலகளந்த பெருமாள் கோவிலில்வேணுகோபாலன் ஜெயந்தி விழா
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி அவதார மகோற்சவம் வரும் 21ம் தேதி துவங்குகிறது. பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் ஜெயந்தி அவதார மகோற்சவம் வரும் 21ம் தேதி துவங்குகிறது. அன்று காலை சத்யபாமா சமேத வேணுகோபாலன் முத்துபந்தல் விமானத்தில் வீதியுலா நடக்கிறது.மதியம் அலங்கார திருமஞ்சன சேவை சாற்றுமறையும், மாலை அம்ச வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது. மறுநாள் (22ம் தேதி) தேகளீச பெருமாள் விமான புறப்பாடு, உறியடி உற்சவமும், மதியம் அலங்கார திருமஞ்சனம், மாலை சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25ம் தேதி காலை நாச்சியார் அலங்காரம், மதியம் அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்றுமறை, மாலை கருட சேவையும் நடக்கிறது. தொடர்ந்து 27ம் தேதி காலை தங்க பல்லக்கு, மதியம் திருக்கல்யாணம், மாலை முத்துப்பல்லக்கு நடக்கிறது. விழாவின் நிறைவாக 30ம் தேதி காலை மங்கள கிரி, மதியம் மஹாசாந்தி ஹோமம், மாலை புஷ்ப விமானத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமி உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.