உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் குளத்தில் கல்வெட்டு படியெடுப்பு

திருத்தணி கோவில் குளத்தில் கல்வெட்டு படியெடுப்பு

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் உள்ள, கல்ஹாரி தீர்த்த குளத்தில், கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியை, தொல்லியல் துறையினர் நேற்று துவங்கினர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில் கல்ஹாரி (இந்திர) தீர்த்த குளம் உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி பழுதடைந்து இருந்தது. கடந்த ஆண்டு, திருத்தணி முருகன் திருவடி சபையினர், குளத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் எழுப்பினர்.இந்த நிலையில், முருகன் திருவடி சபை நிர்வாகத்தினர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையருக்கு, தீர்த்த குளத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுக்கும்படி, கடிதம் அனுப்பினர். அதையடுத்து, தொல்லியல் துறை ஆணையர் கார்த்திகேயன் ஆணைப்படி, கல்வெட்டாய்வாளர் லோகநாதன் தலைமையில், சிற்றெழுத்தர்கள் ஜோதி, ராமதாசு, துரை மற்றும் ஞானப்பிரகாசம் ஆகியோர் நேற்று கல்ஹாரி தீர்த்த குளத்தில் உள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டனர். கல்வெட்டுகளில் உள்ள சுண்ணாம்பு, எண்ணெய், பாசிகளை நீக்கி சுத்தம் செய்த பின், தாளில் கல்வெட்டு எழுத்துக்களை படியெடுத்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பணிகள் நடக்க உள்ளன. விரைவில் கல்வெட்டு தகவல்கள் வெளியிடப்படும் என, ஆய்வாளர் லோகநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !