உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புயலே அடித்தாலும் பணிவு ஜெயிக்கும்!

புயலே அடித்தாலும் பணிவு ஜெயிக்கும்!

புயலடித்தால் வலிமையான மரம் கூட சாய்ந்து விடும். ஆனால் சிறு புல் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. பணிவின் பெருமை இத்தகையது. பிறரை வணங்குவது பலவீனம் என்று நினைக்க வேண்டாம். நாம் புல்லையும் வணங்கும் பெருந்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும். கோடரியால் தன்னை வெட்டுபவனுக்கும் பச்சை மரம் நிழல் தந்து உதவுகிறது. அது போல தன்னை துன்புறுத்துபவனும் இன்புற்று வாழ நினைப்பவனே உண்மையான ஆன்மிகவாதி. உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். இதுவே உண்மையான வழிபாடாகும். வாழ்வில் இன்பம், துன்பம் எது வந்தாலும் கடவுளின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். வாழ்வில் இழந்த செல்வத்தைக் கூட சம்பாதித்து விட முடியும். ஆனால் இழந்து போன ஒரு நிமிட நேரத்தை சம்பாதிக்கவே முடியாது. காலம் பொன் போன்றது என்பதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்படுங்கள். நம்பிக்கை இல்லாமல் வாழ்வில் வளர்ச்சி உண்டாகாது. விண்ணுலகில் இருக்கும் தெய்வத்தை நம்புவதைக் காட்டிலும் மனிதனுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.

அன்பு மிக்க கடவுளே தீமைகளைக் களைவதற்காக கோர வடிவிலும் காட்சியளிக்கிறார். இரண்யகசிபுவிடம் சீறிப் பாய்ந்த நரசிம்ம மூர்த்தியே பக்த பிரகலாதனைக் கண்டதும் சாந்தம் அடைந்தார். சுயநலமும், ஆணவமும் உள்ளவர்கள் கடவுளை நெருங்கவே முடியாது. எளிமையும், துõய்மையும் மிக்கவர்கள் மனம் ஒன்றி வழிபடும் போது கடவுளின் அருளுக்கு பாத்திரமாகி விடுகிறார்கள். கண்ணை மூடித் திறப்பதற்குள் கிணற்றில் குதித்து விடலாம். ஆனால், மேலே ஏறி வர போராட வேண்டியிருக்கும். அதுபோல கடவுளின் கருணையைப் பெறுவது கடினம். அதை இழப்பதற்கு ஒரு நிமிடம் போதும். எல்லாம் கடவுள் செயல் என்று கூறிக் கொண்டு சும்மா இருப்பவர்கள் சோம்பேறிகள். கடவுள் அளித்த அறிவுச் செல்வத்தைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.  இன்று நண்பனாக இருப்பவன் நாளை எதிரியாக மாறலாம். ஆனால் நம்பிக்கைக்குரிய ஒரே நண்பர் கடவுள் மட்டுமே. இவரைச் சரணடைந்தால் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆரம்ப காலத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். பக்தி பக்குவம் அடையும் போது பயம் அறவே நீங்கி விடும். இதையே பிரேமை பக்தி என்பார்கள். கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பது கடவுளை திருப்திப்படுத்த அல்ல. இதன் மூலம் மனம் துõய்மை பெறுகிறது. மந்திரம் ஜெபிப்பதால் கடவுளுக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை. கடல் அலைகளைக் கட்டுப்படுத்த கரை இருக்கிறது. அது போல மனதில் எழும் எண்ண அலைகளைக் கட்டுப்படுத்தவே விரதங்களை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர். (மகான் சொல்கிறார் அமிர்தானந்தமயி)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !