தாமரையிலை நீர்போல் உலகில் பற்றின்றி வாழ்வது எப்படி?
அதிக அளவில் ஜபம், தியானம், பிரார்த்தனை சாஸ்திரங்களைப் படித்தல், சத்சங்கம் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களால் மட்டுமே உலகில் தாமரையிலை நீர்போல் பற்றின்றி வாழ முடியும். அசையாமல் இருக்கும் மலையைப் போல, மனம் எந்த நிலையிலும் சஞ்சலமின்றி இறைவன் திருவடியில் ஊன்றி இருக்க வேண்டும். நம் சிந்தனைகள் அனைத்துக்கும் அடிநாதமாக ஆன்மிகம் விளங்க வேண்டும். மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்று ஆன்றோர் கூறினர். மனம் செம்மையாகிற வரையில் மந்திரத்தைத்தான் ஜபம் செய்ய வேண்டும். அவ்விதம் செய்தால்தான், கள்ளுண்ட பேய்க்குரங்காக உள்ள நம் மனம் அடங்கும். முந்தைய பிறவிகளின் செய்த நிறைந்த தவம் காரணமாகவும் இயல்பாகவே சிலருக்கு உலகப்பற்று குறைவாக இருக்கும். முந்தைய பிறவிகளில் செய்த தவம், இந்தப் பிறவியில் செய்த தவம் என்று எது எப்படியிருப்பினும் தாமரையிலை நீர்போல் வாழ்வது என்பது, இறைவன் ஒருவருக்கு அளிக்கும் மாபெரும் கொடை என்பதில் சந்தேகமே இல்லை.