திண்டுக்கல்லில் நூதனம்.. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பூஜை: வழிபாட்டில் வாழைப்பழம் சூறை!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, வாழைப்பழம், கடலை, நெல் ஆகியவற்றை சூறை விட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டி கிராமம் கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் மாசிமாதம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் பல மாவட்டங்களின் நுாற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்கும்.கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த கோர்ட் தடை உள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் ஊர் பொதுமக்கள் காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், முனியப்பன் ஆகிய தெய்வங்களுக்கு மாவிளக்கு, தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். கிடா வெட்டி விருந்து வைத்தனர்.
வாழைப்பழம் சூறை: ஜல்லிக்கட்டு நடத்த தடையால் நேற்று கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், 50 ஜல்லிக்கட்டு காளைகளை ஒன்றாக நிறுத்தி சிறப்பு பூஜை செய்தனர். மாடுகளுக்கு பழங்கள் ஊட்டினர். தொடர்நது வாழைப்பழம், கடலை, நெல் உட்பட நவதானியங்களை சூறை விட்டு வழிபட்டனர். இதில் பூஜாரி வீரபத்திரன், நாட்டாண்மை சின்னைய்யா, பெரியதனம் பாலகுரு, மணியக்காரர் ஆச்சிமுத்து, முருகன் பங்கேற்றனர். நாட்டாண்மை சின்னையா கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளாக முன்னோர்கள் ஜல்லிக்கட்டு நடத்தினர். இந்தாண்டு நடத்தாததால், கிராமத்தில் உள்ளோர் அம்மை உட்பட பல தொற்று நோய்களுக்கு ஆளாகினர். இதனால் நாங்கள் கதிர் நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்துள்ளோம். கடந்த 2 நாட்களில் நோய்கள் குறைந்துள்ளன. ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு செய்வோம், என்றனர்.