உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா தொடக்கம்!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா தொடக்கம்!

நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கேரளாவை சேர்ந்த பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி இங்கு வந்து கடலில் குளித்து அம்மனை வழிபடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களில் ஏராளமானோர் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர்.

இங்கு நடைபெறும் முக்கிய திருவிழா மாசிக்கொடை விழா. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் பூஜிக்கப்பட்ட கொடியை பூஜாரிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கொடிமரத்தில் மேல்சாந்தி சட்டநாதன்குருக்கள் கொடியேற்றினார். அப்போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. வரும் நான்காம் தேதி இரவு பெரிபடுக்கை பூஜையும், ஏழாம் தேதி இரவு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது. எட்டாம் தேதி ஒடுக்கு பூஜையுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது. கொடியேற்று விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பத்து நாட்களும் நடைபெறும் இந்து சமய மாநாட்டை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விழா பாதுகாப்புக்காக நெல்லை, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !