ஏகாம்பரநாதர் பக்தர்கள் எதிர்பார்ப்பு பங்குனி உத்திர திருவிழாவில் உற்சவர் சிலை எது?
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சுவாமி வீதி உலாவின் போது, பழைய சிலை பயன்படுத்தப்படுமா அல்லது புதிய சிலை பயன்படுத்தப்படுமா என்ற குழப்பம், பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம், இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை.
காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் பழமையானது. பல்லவன். சோழன், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் அதிகம் வருவர். பங்குனி உத்திர திருவிழா, ஆண்டுதோறும், 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி, சோமாஸ்கந்தர் ஆகிய மூவரும் ஒரே பீடத்தில் அமர்ந்திருக்கும் சிலை தான், கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களுக்கும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். பல நுாறு ஆண்டுகளாக இந்த சிலை தான், உற்சவத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆனால் இந்த சிலை சற்று சேதம் அடைந்து, பீடத்தின் அடிப்பாகம் விரிசல் கண்டுள்ளது. எனவே, அதற்கு பதிலாக, புதிய உற்சவர் சிலை செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு, கோவில் உபயதாரர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவின் படி, புதிய சிலை செய்யும் பணி நடப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து வருகிறது.இந்நிலையில், வரும் 13ல், பங்குனி உத்திர திருவிழா நடக்க இருக்கிறது. இந்த உற்சவத்தில், தற்போது இருக்கும் உற்சவர் சிலையே பயன்படுத்தப்படுமா? அல்லது புதிய உற்சவர் சிலை பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல நுாறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் அந்த சிலை தான், காஞ்சி மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இந்நிலையில், புதிய சிலை தயாரிக்கப்படுவதாக கூறப்படுவதால், எந்த சிலை பயன்படுத்தப்படும் என்ற கேள்வி, பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஆனால், அறநிலையத் துறையோ, அதுகுறித்து உறுதியான எந்த தகவலும் தெரிவிக்காமல் உள்ளது. பங்குனி உற்சவத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதில், எந்த உற்சவர் சிலை வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் என, இன்னும் முடிவு செய்யப்பட வில்லை; கடைசி நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.
- பரணிகுமார் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர்