காய்கறிகள், பழ அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலிப்பு!
விருத்தாசலம்: மாசிமக பிரம்மோற்சவ விடையாற்றி உற்சவத்தில், காய்கறிகள் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம், கடந்த மாதம் 13ல் துவங்கி, 24ம் தேதியுடன் முடிந்து, 10 நாள் விடையாற்றி உற்சவம் நடந்து வருகிறது. அதில் 6 ம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் காலை விநாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில், நூற்றுக்கால் மண்டபத்தில் கேரட், தக்காளி, கத்தரி, வெண்டை, பாகல், புடலை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள்; ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, திராட்சை, வாழை உள்ளிட்ட பழங்களால் அலங்கரித்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.