உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூரில் பங்குனி உத்திர திருவிழா: வலம் வர தயாராகின்றன தேர்கள்!

பேரூரில் பங்குனி உத்திர திருவிழா: வலம் வர தயாராகின்றன தேர்கள்!

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்திருவிழாவையொட்டி, தேர்கள் சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. ‘மேலைச்சிதம்பரம்’ என்றழைக்கப்படும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா, மார்ச் 14ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்குனி உத்திரத்திருநாளான, மார்ச் 20ம் தேதி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தேர்த்திருவிழாவின் போது, பஞ்சமூர்த்திகள் உலா வருவர். பிரம்மாண்ட தேரில் பட்டீஸ்வரர் வீற்றிருப்பார். அதன் பின், அம்மன் தேரில் பச்சைநாயகி அம்மன் வீற்றிருப்பார்.  அதன் பின் விநாயகர் தேரும், முருகர் தேரும் வலம் வருகின்றன.

சண்டிகேஸ்வரருக்கு தேர் இல்லாததால், அவரை கைவண்டி தயாரித்து அதில் எழுந்தருளச்செய்து, திருவீதிஉலா அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நீண்ட நாட்களாக சண்டிகேஸ்வரருக்கு தேர் இல்லாமல் இருந்தது. அக்குறையை போக்குவதற்கு,  பேரூராதீனம் சாந்தலிங்கராமசாமி அடிகளார் முயற்சியின் பயனாக, கடந்த டிச., 28ம் தேதி தேர் தயாரிக்கும் பணிகள் துவங்கின. தற்போது தேர்ப்பணிகள் நிறைவடைந்து, 13 அடி தேர் அமைக்கப்பட்டு, அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கான, 9 லட்சம் ரூபாய் செலவை பேரூராதீனமே ஏற்றுக்கொண்டது. மார்ச் 5ம் தேதி, கோவிலுக்கு தேர் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவில் வசம் உள்ள மற்ற நான்கு தேர்கள், சுத்தம் செய்யப்பட்டு, அவை திருவிழாவுக்கு தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மார்ச் 11ம் தேதி தேர், பொதுப்பணி மற்றும் அறநிலையத்துறை சார்பில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், அற நிலையத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !