பாகூர் லட்சுமி நரசிம்மர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
பாகூர்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு புதியதாக செய்யப்பட்டுள்ள தேரின் வெள்ளோட்டம், ஞாயிறன்று 6ம் தேதி நடக்கிறது.
தவளக்குப்பம் அடுத்த தமிழகப் பகுதியான சிங்கிரிகுடி கிராமத்தில், கனகவள்ளி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பல்லவ மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டபட்டதாகவும், அதன்பின், சோழ மன்னர்கள், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றதாக வரலாறு உள்ளது. இரணியனை வதம் செய்த கோலத்தில், 16 கைகளுடன் உக்கிர நிலையில், நரசிம்ம பெருமாள் மேற்கு திசை பார்த்து, பிரகலாதனுக்கு காட்சி தருவது, இக்கோவிலில் தனி சிறப்பாக கருதப்படுகிறது. இங்கு நரசிம்மரை வழிபடுவதால், நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பதும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கி மன உறுதி அதிகரிக்கும் என்பதும் ஐதீகம்.
சிறப்புவாய்ந்த இக்கோவிலின் பழமைவாய்ந்த தேர் பலகீனமடைந்தது. இதனையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யும் பணி துவங்கியது. மூலவர் கோபுரத்தின் உயரத்திற்கு இணையாக, 54 அடி உயரத்திற்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. பழைய தேரில் இருந்ததுபோல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது. தற்போது, பணிகள் முடிவடைந்து, வண்ணம் பூசும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புதிய தேரின் வெள்ளோட்டம் ஞாயிறன்று 6ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, காலை 6.00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து காலை 7:00 மணிக்கு, புதிய தேர் மாட வீதிகள் வழியாக வெள்ளோட்டம் நடக்கிறது.