உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்மநாப சுவாமி பொக்கிஷங்கள் மதிப்பீடுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதி!

பத்மநாப சுவாமி பொக்கிஷங்கள் மதிப்பீடுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதி!

திருவனந்தபுரம்:பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஐந்து பேர் கொண்ட குழு மட்டும் போதாது என்பதால், வேறு துறை வல்லுனர்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில், பாதாள அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இப்பொக்கிஷங்களின் மதிப்பீடு குறித்து அறிய சுப்ரீம் கோர்ட், ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. பொக்கிஷங்களின் தரம், கணக்கெடுப்பு, அவற்றை எவ்வாறெல்லாம் பாதுகாப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து, திட்டத்தை தயாரித்துள்ளது. மேலும், ஐந்து பேர் கொண்ட குழுவால் மட்டும் பொக்கிஷங்களை மதிப்பிட முடியாது. தேசிய அருங்காட்சியக மையம், தொல்லியல் ஆய்வுத் துறை போன்ற பல துறைகளின் வல்லுனர்களையும் இதற்காக பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.மேலும், இப்பணிக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மதிப்பிடப்படும் பொக்கிஷ பொருட்களை பொதுமக்கள் பார்வைக்காக வைப்பது குறித்தும், அதற்கென சிறப்பாக அமைக்கப்பட்ட பகுதியில் அவற்றை வைக்கலாமா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.அவ்வாறு பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு மன்னர் குடும்பத்தினருக்கு ஆட்சேபனை இல்லை என, ஏற்கனவே அக்குடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட்டில் அறிவித்துள்ளனர். மதிப்பீட்டு பணிக்காக ரேடியோகிராபி, எக்ஸ்ரே எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி, நியூட்ரான் ஆக்டிவேஷன் அனாலிசிஸ் ஆகிய உபகரணங்களை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.ஏற்கனவே, தேவ பிரசன்னத்தில், "பி அறையை திறந்தால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதாள அறை பொக்கிஷங்களை மதிப்பீடு செய்வது மற்றும் "பி அறையை திறப்பது ஆகியவற்றை நிறுத்தி வைக்கவேண்டும் என மன்னர் குடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !