உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2000 ஆண்டு பழமையான மட்கலன்கள் கண்டுபிடிப்பு

2000 ஆண்டு பழமையான மட்கலன்கள் கண்டுபிடிப்பு

மயிலாடுதுறை அருகே, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மட்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் ஆய்வு மாணவர், அருண்ராஜ் மற்றும் ஆய்வு மாணவி ஆரவல்லி ஆகியோர், முனைவர் பட்ட ஆய்விற்காக மயிலாடுதுறையில் கள ஆய்வுகள் மேற்கொண்டனர்.அப்போது, செம்பியன் கண்டியூரில் ஜீவானந்தம் என்பவருக்குச் சொந்தமான வயலில், கிடைத்த, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மட்கலன்களைக் கண்டுபிடித்தனர்.

கைக்கோடரிகள்பல்கலை தொல்லியல் துறை புல தலைவர் சு.ராஜவேலு மற்றும் பேராசிரியர் ந.அதியமான் ஆகியோர் கூறியதாவது: செம்பியன் கண்டியூர், தமிழக தொல்லியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய ஊர். இந்த ஊரில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட கள ஆய்வுகளில், இரும்பு காலத்தைச் சேர்ந்த மட்கலன்களுடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த வழவழப்பான கைக்கோடரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதையடுத்து, தொடர்ந்து செம்பியன் கண்டியூரில் தொல்லியல் துறையும் அகழாய்வுகள் மேற்கொண்டது. அதில், இரும்பு காலத்தை சேர்ந்த மட்கலன்களும் ஈமத்தாழிகளும் கிடைத்துள்ளன. மட்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில், பெரிய ஈமத்தாழிகள் மண்ணில் புதைந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். கீறல் குறியீடுமட்கலன்களில், சிறிய பானைகளும், வட்டில்களும், தட்டுகளும், கிண்ணங்களும் காணப்படுகின்றன. இவை வழவழப்பான களிமண்ணால் செய்யப்பட்டவை. கறுப்பு, சிவப்பு நிற மட்கலன்களும், கறுப்பு நிற மட்கலன்களும், சிவப்பு மட்கலன்களும் இவற்றில் அடங்கும். சில மட்கலன்கள் மீது கீறல் குறியீடுகள் காணப்படுகின்றன. இக்குறியீடுகள், இரும்பு கால மக்கள் பயன்படுத்திய குறியீடுகள். மேலும், பெண்கள் விளையாடும் வட்ட வடிவ சில்லுகளும், சில எலும்புச் சிதைவுகளும் இங்கு கிடைத்துள்ளன. இந்த பகுதியில் அகழாய்வுகளை மீண்டும் மேற்கொண்டால் செம்பியன் கண்டியூரின் முழுமையான தொன்மை வரலாற்றையும், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் அறிய இயலும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !